மைசூரு பெயர் பலகை கலவரம் 90 பேர் மீது 3 பிரிவில் வழக்கு
மைசூரு பெயர் பலகை கலவரம் 90 பேர் மீது 3 பிரிவில் வழக்கு
ADDED : பிப் 01, 2024 07:16 AM

மைசூரு: சாலைக்கு பெயர் வைப்பதில், இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், இதுவரை 90 பேர் மீது தனித்தனியாக மூன்று பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடின் ஹல்லரே கிராமத்தில், தலித் மற்றும் வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு ஹிரா கிராமத்துக்கு செல்லும் சாலைக்கு அம்பேத்கர் பெயர் வைக்க, உள்ளூர் பஞ்சாயத்தில் அனுமதியும் பெற்றனர். ஆனால், இதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், கடந்த 29ம் தேதி இரவு இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. மாறி மாறி கற்களை வீசியதில், பலர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக, இரு தரப்பிலும் 39 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மைசூரு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அசோக் என்பவர் அளித்த புகாரில், இரு குழுவை சேர்ந்த 90 பேர் மீது தனித்தனியாக மூன்று பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
எஸ்.பி., சீமா லட்கர் கூறுகையில், ''ஹல்லாரே கிராமத்தில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் அந்த கிராமத்தில் அமைதி கூட்டம் நடத்தப்படும். அதுமட்டுமின்றி, ஹல்லாரே, ஹீரா,ஹூல்லஹள்ளி கிராமங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். கிராம மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது,'' என்றார்.
இதே வேளையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,தர்ஷன் துருவ நாராயணன் நேற்று கிராமத்தில் ஆய்வு செய்தார்.