ADDED : ஜன 31, 2024 07:43 AM

மைசூரு : சாலைக்கு பெயர் வைப்பதில் இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கல்வீச்சு நடந்தது. இதில், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; இரு சமூகத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடின் ஹல்லரே கிராமத்தில், தலித் மற்றும் வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, ஹிரா கிராமத்துக்கு செல்லும் சாலைக்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் என்று உள்ளூர் பஞ்சாயத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்றனர். ஆனால், மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெயர் பலகை வைக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இதே விஷயம் தொடர்பாக, இரு தரப்பு இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது.
ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பிலும் பலர் படுகாயமடைந்தனர். சில வீடுகளிலும் கற்கள் வீசப்பட்டன. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு வந்தனர். போலீசார் வந்ததை பார்த்தவர்கள், அங்கிருந்து ஓடிவிட்டனர்.
மைசூரு எஸ்.பி., சீமா லட்கர் அங்கு வந்து பாதுகாப்பை பலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தாக்குதலில் காயமடைந்த 25க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.