நெல் கொள்முதல் குறித்து இபிஎஸ் சொன்னதெல்லாம் புளுகு மூட்டைகள்தான்: முதல்வர் ஸ்டாலின்
நெல் கொள்முதல் குறித்து இபிஎஸ் சொன்னதெல்லாம் புளுகு மூட்டைகள்தான்: முதல்வர் ஸ்டாலின்
ADDED : அக் 26, 2025 01:12 PM

சென்னை: ''நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்சும், அவரது கட்சியினரும் சொன்னவையெல்லாம் புளுகு மூட்டைகள்தான்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது கடிதம்: புயல் சின்னமும், பெருமழையும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களை அச்சுறுத்துகிற நிலையில், வடகிழக்குப் பருவகால இயற்கையின் தன்மையை உணர்ந்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இயற்கைப் பேரிடர் சூழல்களில் எதிர்க்கட்சியினரும் களமிறங்கி மக்கள் நலப் பணிகளை ஆற்றுவதுதான் நல்ல ஜனநாயகத்திற்கான அடையாளம்.
நிவாரணப் பணிகள்
2018ம் ஆண்டு கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அப்போது ஆட்சியிலிருந்த அதிமுகவின் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் சாவகாசமாகக் களத்திற்கு வந்த நிலையிலும், எதிர்க்கட்சியான திமுகதான் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், பொழுது விடிவதற்கு முன்பாகவே களமிறங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. இப்போதுள்ள எதிர்க்கட்சித் தலைவர், பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் ஏதாவது அறுவடை செய்ய முடியுமா என்றுதான் செயல்படுகிறாரே தவிர, ஆக்கப்பூர்வமாகவோ மக்களுக்கு உறுதுணையாக உண்மையாகவோ எதையும் செய்யும் எண்ணமில்லாமல் இருக்கிறார்.
புளுகு மூட்டைகள்
நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், அவரது கட்சியினரும் சொன்னவையெல்லாம் புளுகு மூட்டைகள்தான் என்பதை திராவிட மாடல் அரசின் தொடர் செயல்பாடுகள் நிரூபித்துவிட்டன. பொய்களையும், அவதூறுகளையும் புறந்தள்ளி, நாம் தொடர்ந்து மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டே இருப்போம். அத்துடன், ஜனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் திமுகவுக்கு உள்ளது.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைத் தமிழகத்தில் அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாகத் இந்தியத் தலைமைத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்கின்ற பீஹார் மாநிலத்தில் 65 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை இதே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் கமிஷன் பறித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்திலும் அதே குறுக்குவழியைப் பின்பற்ற மத்திய பாஜ அரசு தனது கைப்பாவையாகத் தேர்தல் கமிஷனை பயன்படுத்த முயற்சிக்கிறது என்பதை திமுகவும், இண்டி கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
தப்புக்கணக்கு
பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டால் பாஜவும் அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கணக்கு போடுகிறார்கள். அதாவது, நேரடியாகத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் வலிமையில்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையைப் பறித்துவிட்டு வெற்றி பெறலாம் எனப் போடுகின்ற கணக்கு என்பது, தமிழகத்தை பொறுத்தவரை தப்புக்கணக்காகத்தான் ஆகும்.
தலைகுனியாது
மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் S.I.R. செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து திமுகவினர் கடமையாற்ற வேண்டும். எதிர்க்கட்சியான அதிமுக தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பாஜவிடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரமிருக்காது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் திமுகவினரும் தோழமைக் கட்சியினரும்தான். மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கின்ற திமுக ஆட்சியில் தமிழகம் தலைகுனியாது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

