மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்; உடந்தையாக இருந்த பெண் தலைமை ஆசிரியரும் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்; உடந்தையாக இருந்த பெண் தலைமை ஆசிரியரும் கைது
ADDED : அக் 26, 2025 11:56 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்த ஆசிரியர், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே எட்டுப்புளிக்காடு,அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில், கரம்பயம், கத்திரிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், 53, என்பவர் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பாஸ்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை, வகுப்பறையில், எழுந்து நின்று படிக்கக் கூறியுள்ளார்.
மாணவி படித்துக் கொண்டிருந்த போது ஆசிரியர் பாஸ்கர், மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக, மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இது குறித்து, மாணவியின் பெற்றோர் பள்ளியின் தலைமைஆசிரியராக பணியாற்றும், கரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயா, 55, என்பவரிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த,மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில், ஆசிரியர் பாஸ்கர் மீது புகாரும் அளித்தனர்.
தொடர்ந்து,போலீசார் ஆசிரியர் பாஸ்கரிடம் நடத்திய விசாரணையில், அவரது வகுப்பில், மேலும் ஆறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஏற்கனவே பல மாணவிகளின் பெற்றோர் தலைமையாசிரியையிடம் கூறிய போது, கண்டு கொள்ளாமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, ஆசிரியர் பாஸ்கர் மற்றும் அவருக்கு உடந்தையாக தலைமை ஆசிரியை விஜயா ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

