ADDED : மார் 21, 2025 04:04 AM
மைசூரு : மைசூரு மாநகராட்சி நேற்று 1,228.72 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.
மைசூரு மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி காலம் 2023 செப்டம்பருடன் முடிவடைந்தது. அதன் பின், பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. நேற்று காலை 2025 - 26ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டை, மைசூரு நிர்வாக அதிகாரி ரமேஷ் தாக்கல் செய்தார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் செய்க் தன்வீர் ஆசிப் இருந்தார்.
பட்ஜெட்டில் நிர்வாக அதிகாரி ரமேஷ் குறிப்பிட்டுள்ளதாவது:
மைசூரு மாநகராட்சிக்கு அதன் சொந்த வளங்களில் இருந்து 392.29 கோடி ரூபாயும்; அரசு, 525.91 கோடி ரூபாய் என மொத்தம், 918.20 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
வர்த்தக லைசென்ஸ் வழங்குவதன் மூலம் ஆறு கோடி ரூபாய்; சொத்து வரியில் இருந்து 252.60 கோடி ரூபாய்; குடிநீர் கட்டணத்தில் இருந்து 98.51 கோடி ரூபாய்; நில வரி, சாலையில் குழி தோண்டுவதற்கு கட்டணங்கள் என 15.73 கோடி ரூபாய் வருவாய் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமர்ஷியல் காம்பிளக்ஸ்கள், மார்க்கெட்டுகள், கருடா மால் மூலம் மாதந்தோறும் 3.09 கோடி ரூபாய் வருவாய் வரும் என நம்புகிறோம்.
மாநகராட்சியில் 2025 மார்ச் 1ம் தேதியில், 310.51 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. அத்துடன் நடப்பாண்டு பட்ஜெட்டில் 918.20 கோடி ரூபாய் என மொத்தம் 1,228.72 கோடி ரூபாய்க்கு திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. 1,291.01 கோடி ரூபாய் செலவுகள் போக, 9.70 கோடி ரூபாய் உபரி உள்ளது.

