'டில்லி கேபிட்டல்ஸ்' அணிக்கு தேர்வான மைசூரு இளைஞர்
'டில்லி கேபிட்டல்ஸ்' அணிக்கு தேர்வான மைசூரு இளைஞர்
ADDED : டிச 06, 2024 06:37 AM

மைசூரை சேர்ந்த இளைஞர், விரைவில் நடக்கவுள்ள 'ஐ.பி.எல்., டி 20' கிரிக்கெட் போட்டியில், 'டில்லி கேபிட்டல்ஸ்' அணிக்கு தேர்வாகி உள்ளார்.
அடுத்தாண்டு நடக்கவுள்ள, 'இந்தியன் பிரீமியர் லீக் டி20' போட்டியில் பங்கேற்கும் அணிகளின் விளையாட்டு வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி, கடந்த 24, 25ம் தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடந்தது.
இதில், 'டில்லி கேபிட்டல்ஸ்' அணியில், கர்நாடகாவை சேர்ந்த கே.எல்.ராகுல் தவிர, மற்றொரு இளம் வீரரான மைசூரை சேர்ந்த மன்வந்த் குமாரும் தேர்வாகி உள்ளார். இவரை 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளனர்.
தற்போது, 20 வயதாகும் மன்வந்த் குமார், இடது கை பேட்ஸ்மேன், வலது கை பந்து வீச்சாளர் என 'ஆல் ரவுண்டராக' உள்ளார். இவர் ஏற்கனவே, கர்நாடகா 19 மற்றும் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கர்நாடக அணியில் இடம் பெற்றுள்ளார்.
மன்வந்த் குமார், தனது 12 வயதில் இருந்து மைசூரில் உள்ள மஹாராஜா கல்லுாரி மைதானத்தில், எம்.யு.சி.எஸ்.சி., அணியின் பயிற்சியாளர் மன்சூர் அகமதிடமும்; ஆர்.பி.என்.சி.சி., அணியின் பயிற்சியாளர் ரவீந்திராவிடமும்; கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் மைசூரு மண்டல தலைவர் பாலசந்தர் ஆகியோரிடமும் பயிற்சி பெற்றுள்ளார்.
கடந்த 2023ல் நடந்த 'மஹாராஜா டி 20' விளையாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தார். அத்துடன், 22 விக்கெட் எடுத்து, 'பர்பிள் கேப்' பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று, நடப்பாண்டு நடந்த போட்டியிலும், 16 விக்கெட்களை வீழ்த்தினார். இது அவரின் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்து, 2025ல் நடக்கும் ஐ.பி.எல்., டி20 போட்டியில் விளையாட உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏலத்தில் முதல் ரவுண்டில் என்னை யாரும் தேர்வு செய்யவில்லை. நான் தேர்வாக மாட்டேன் என்று நினைத்தேன்.
ஆனால், இரண்டாவது சுற்றில், என்னை டில்லி அணியினர் வாங்கியது ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. ஐ.பி.எல்., போட்டியில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு,'' என்றார்.
இவரது தந்தை லட்சுமி குமார், கார் ஓட்டுனராக உள்ளார். தாயார் ஸ்ரீதேவி குமார் வீட்டில் உள்ளார். இவர்களின் மூத்த மகனும் கிரிக்கெட் வீரர் தான். அவர், தனது சகோதரருக்கு அளித்த ஊக்கத்தால், ஐ.பி.எல்.,லில் நுழைந்துள்ளார். - நமது நிருபர் -