தனிக்கொடி கேட்கும் நாகா குழு: ஆயுதம் ஏந்துவோம் என எச்சரிக்கை
தனிக்கொடி கேட்கும் நாகா குழு: ஆயுதம் ஏந்துவோம் என எச்சரிக்கை
ADDED : நவ 10, 2024 04:44 AM

குவஹாத்தி: 'நாகாலாந்துக்கு தனிக்கொடி மற்றும் அரசியலமைப்பு கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், 27 ஆண்டு போர் நிறுத்த முடிவை கைவிட்டு மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்' என, மத்திய அரசுக்கு என்.எஸ்.சி.என்., - ஐ.எம்., என்ற நாகா கிளர்ச்சிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும், அதை தனி நாடாக அறிவிக்க கோரியும், என்.எஸ்.சி.என்., - ஐ.எம்., எனப்படும், நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் - இசாக் முய்வா உட்பட பல்வேறு கிளர்ச்சிக்குழுக்கள் கோரி வருகின்றன.
இது தொடர்பாக, கிளர்ச்சி குழுவினருக்கும், ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்து வந்தது. கடந்த 1997ல் என்.எஸ்.சி.என்., - ஐ.எம்., போர் நிறுத்தத்தை அறிவித்தது.
திமாபுரில் உள்ள ஹெப்ரான் என்ற இடத்தில் முகாம் அமைத்து என்.எஸ்.சி.என்., - ஐ.எம்., குழுவினர் அங்கு தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர்.
அந்த குழுவின் தலைவர் இசாக் முய்வாவை, இவர்கள் பிரதமர் என்றே அழைக்கின்றனர். 1997க்கு பின், அரசு தரப்புக்கும், என்.எஸ்.சி.என்., - ஐ.எம்., குழுவுக்கும் இடையே, 600 சுற்று பேச்சு நடந்தன.
அதன் முடிவில், 2015, ஆக., 3ல் மத்திய அரசுக்கும், கிளர்ச்சி குழுவுக்கும் இடையே உடன்படிக்கை கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின்படி, நாகாலாந்தின் தனித்துவமான வரலாறு பகிரப்பட்ட இறையாண்மையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு ஒப்புக் கொண்டதாக இசாக் முய்வா தெரிவித்தார்.
இவர்கள் கோரும் தனி நாகாலாந்து கொடி மற்றும் அரசியலமைப்பு என்ற கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது.
ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டதை இப்போது ஏற்க மறுப்பது துரோகம் என குற்றஞ்சாட்டும் நாகா கிளர்ச்சியாளர்கள், இந்த விவகாரத்தில் அரசியல் தீர்வு காண மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை கோருகின்றனர்.
ஏற்க தவறினால், 27 ஆண்டு போர் நிறுத்தத்தை திரும்ப பெற்று மீண்டும் ஆயுதம் ஏந்துவோம். பின்விளைவுகளுக்கு மத்திய அரசு தான் பொறுப்பு என, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.