கன்னடத்தில் பெயர் பலகை மாநகராட்சி இறுதி எச்சரிக்கை
கன்னடத்தில் பெயர் பலகை மாநகராட்சி இறுதி எச்சரிக்கை
ADDED : பிப் 29, 2024 07:10 AM
பெங்களூரு : ''புதிய சட்டப்படி அனைத்து விதமான வர்த்தக கடைகளின் பெயர் பலகைகளிலும், 60 சதவீதம் கன்னட மொழியில் இல்லாவிட்டால், அத்தகைய கடைகளுக்கு சீல் வைக்கப்படும்,'' என, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் இறுதிகட்ட எச்சரிக்கை விடுத்தார்.
கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து விதமான வர்த்தக கடைகளின் பெயர் பலகைகளிலும், 60 சதவீதம் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
விதிகளின்படி பெயர் பலகையில் திருத்தம் செய்வதற்கு, பிப்வரி 28ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. இந்த கெடு, நேற்றுடன் நிறைவு பெற்றது.
இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் நேற்று கூறியதாவது:
வர்த்தக கடைகளின் பெயர் பலகைகளிலும், 60 சதவீதம் கன்னட மொழியில் வைப்பதற்கு, விதிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் நிறைவு பெற்றது.
ஆயினும் இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. இன்று மாலைக்குள் பெயர் பலகைகளில் திருத்தம் செய்யாவிட்டால், அத்தகைய கடைகளுக்கு சீல் வைக்கப்படும். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே 90 சதவீதம் கடைகளின் பெயர் பலகைகள் மாற்றி வைத்துள்ளனர். இன்னும் 3,000 கடைகள் மட்டுமே மாற்ற வேண்டி உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள், ஸ்டேட் வங்கி, கனரா வங்கி உட்பட வெவ்வேறு நிறுவனங்கள், கூடுதல் அவகாசம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து, இன்று மாலை ஆலோசித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், “விதிகளின்படி கன்னட பெயர் பலகைகள் வைக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்,” என, கர்நாடக ரக் ஷனா வேதிகே அமைப்பு தலைவர் நாராயணகவுடா தெரிவித்துள்ளார்.

