நமோ பாரத் - மெட்ரோ ரயிலில் பயணிப்போருக்கு ஒரு முறை மட்டுமே பாதுகாப்பு சோதனை அமல்
நமோ பாரத் - மெட்ரோ ரயிலில் பயணிப்போருக்கு ஒரு முறை மட்டுமே பாதுகாப்பு சோதனை அமல்
ADDED : ஜன 12, 2026 12:33 AM

புதுடில்லி: மெட்ரோ ரயில் பயணத்தை வேகமாகவும் வசதியாகவும் மாற்ற, நியூ அசோக் நகர் நிலையத்தில், நமோ பாரத் மற்றும் டில்லி மெட்ரோ இடையே மாறி பயணம் செய்வோரிடம் ஒருமுறை மட்டுமே பாதுகாப்பு சோதனை நடத்தும் திட்டம் அமலுக்கு வந்தது.
இதுகுறித்து, என்.சி.ஆர்.டி.சி., எனப்படும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நியூ அசோக் நகர் நமோ பாரத் நிலையம் மற்றும் டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நீல வழித்தடத்தில் நியூ அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு இடையே நிலையம் மாறி பயணம் செய்வோரிடம் இனி ஒரு முறை மட்டுமே பாதுகாப்பு சோதனை நடத்தப்படும்.
விலக்கு
இதற்காக, இரண்டு ரயில் நிலையங்களையும் இணைக்கும் நடைமேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலில் பாதுகாப்பு சோதனைச் சாவடி உருவாக்கப்பட்டு உள்ளது.
டில்லி மெட்ரோ ரயிலில் வரும் பயணியர், உ.பி., மாநிலம் மீரட் செல்ல நமோ பாரத் ரயிலில் பயணிக்க வேண்டும். அவர்கள் நியூ அசோக் நகர் நமோ பாரத் நிலையத்தில் இறங்கும் பயணியரிடம் மீண்டும் பாதுகாப்பு சோதனை நடத்தப்படும்.
அதேபோல, டில்லி மெட்ரோ ரயிலில் நொய்டா செல்லும் நமோ பாரத் பயணியருக்கும் இரண்டாவது பாதுகாப்பு சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப் படும்.
மீண்டும் மீண்டும் செய்யப்படும் சோதனைகள் அகற்றப்படுவதால், பயணியரின் பயண நேரம் கணிசமாக குறையும். விரைவாகவும் தொந்தரவு இல்லாமலும் நிலையம் மாறிச் செல்ல முடியும். டில்லி மற்றும் மீரட் நகருக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவான காலத்தில் சென்றடையலாம்.
நகரும் படிக்கட்டு
காஜியாபாத் நமோ பாரத் ரயில் நிலையத்திலும் பிரத்யேக நடைமேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. இது, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஷஹீத் ஸ்தல் நியூ பஸ் அடா நிலையத்துக்கு நேரடி இணைப்பை வழங்குகிறது.
அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளதால், எதிர்காலத்தில் இந்த நடைமேம்பாலத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்த க்யூ.ஆர்., டிக்கெட் முறை ஏற்கனவே அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இரு நிறுவனங் களின் மொபைல் போன் செயலிகள் வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

