தேசிய சட்ட பல்கலை பட்டமளிப்பு விழா ரத்து; மாணவர்கள் எதிர்ப்பால் நிர்வாகம் நடவடிக்கை
தேசிய சட்ட பல்கலை பட்டமளிப்பு விழா ரத்து; மாணவர்கள் எதிர்ப்பால் நிர்வாகம் நடவடிக்கை
ADDED : ஆக 27, 2026 07:08 PM

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற தேசிய சட்ட பல்கலையின், 34வது ஆண்டு பட்டமளிப்பு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பல்கலை நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் நடந்த ஒரு வழக்கில் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், 'போலி பட்டங்களை பயன்படுத்தி பணிகளில் சேர்வோர், தேசத்தை பாதிக்கும் கரப்பான்கள்' என, விமர்சித்து இருந்தார்.
அவரது இந்த கருத்து சர்ச்சையான நிலையில், 'வேலையில்லாத இளைஞர்களை அப்படி விமர்சிக்கவில்லை; மோசடி செய்து பணியில் சேர்பவர்களை மட்டுமே அப்படி விமர்சித்தேன்' என, தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் அளித்தார்.
இதை தொடர்ந்து அவர் விமர்சித்த கரப்பான்பூச்சிகள் பெயரிலேயே கட்சியை தொடங்கிய அபிஜித் தீப்கே, இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத் தாள் கசிவை கண்டித்து டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார்.
அப்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பார்க்க நேரமில்லை' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுத்ததும் சர்ச்சையானது.
இந்த சூழலில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள நல்சார் சட்டப் பல்கலையின் பட்டமளிப்பு விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமை விருந்தினராக பங்கேற்க கூடாது என கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
'நல்சார் பல்கலையில் பட்டம் பெறும் எந்தவொரு மாணவரும் வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்க கூடாது' என, மாநில பார் கவுன்சில்களுக்கு, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டார். அதன் பின், இந்த உத்தரவை வாபஸ் பெற்ற மனன் குமார் மிஸ்ரா, அதற்காக வருத்தமும் தெரிவித்தார்.
இந்நிலையில், நல்சார் சட்ட பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தேசிய சட்ட பல்கலை மாணவர்களும், பட்டமளிப்பு விழாவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், தலைமை விருந்தினராக அழைக்கப்படக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ராவும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கூடாது என திட்டவட்டமாக கூறினர். இதைத் தொடர்ந்து தேசிய சட்ட பல்கலை வெளியிட்ட அறிக்கை:
மாணவர்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, தவிர்க்க முடியாத காரணங்களால் செப்., 12ல் நடக்கவிருந்த பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்படுகிறது. பட்டமளிப்பு விழா நடக்காவிட்டாலும், ஆட்சிமன்ற குழுவின் ஒப்புதலுக்கு பின், மாணவர்களுக்கு தபால் அல்லது கூரியர் மூலம் பட்ட சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். பல்கலையிலும் நேரடியாக வந்து மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
