ஆஸி., கிரிக்கெட் வீராங்கனையருக்கு 'தொல்லை' கைதானவர் மீது பாய்கிறது தேசிய பாதுகாப்பு சட்டம்
ஆஸி., கிரிக்கெட் வீராங்கனையருக்கு 'தொல்லை' கைதானவர் மீது பாய்கிறது தேசிய பாதுகாப்பு சட்டம்
ADDED : அக் 28, 2025 07:27 AM

இந்துார்: மத்திய பிரதேசத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட அகீல் கான் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாக உள்ளது.
ஐ.சி.சி., பெண்கள், 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், நம் நாடு மற்றும் அண்டை நாடான இலங்கையில் நடந்து வருகிறது.
பாலியல் சீண்டல் லீக் போட்டிகள் முடிந்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. நாளை மறுதினம் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில், ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர் கொள்கிறது.
கடந்த 25ம் தேதி, லீக் போட்டியில் பங்கேற்பதற்காக, ம.பி.,யின் இந்துாரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆஸி., கிரிக்கெட் வீராங்கனையர் தங்கியிருந்தனர்.
இதில் இருவர், அருகில் உள்ள காபி ஷாப்புக்கு சென்றனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
12 மாதங்கள்
அதிர்ச்சி அடைந்த வீராங்கனையர், இது குறித்து அணி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
ஆஸி., கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரின்படி வழக்குப் பதிந்த இந்துார் போலீசார், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, நம் நாட்டின் நற்பெயரை கெடுத்த கஜ்ரானா பகுதியைச் சேர்ந்த அகீல் கான், 29, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின், சமீபத்தில் தான் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும், பாலியல் சீண்டல், கொலை, கொள்ளை உட்பட, 10 வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில், அகீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.
இச்சட்டத்தின் கீழ், விசாரணை இல்லாமல், ஒருவரை 12 மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும்.

