ராணுவ அதிகாரி போல் நடித்து பெண்ணை பலாத்காரம் செய்த 'டெலிவரி பாய்' கைது
ராணுவ அதிகாரி போல் நடித்து பெண்ணை பலாத்காரம் செய்த 'டெலிவரி பாய்' கைது
ADDED : அக் 28, 2025 07:25 AM

புதுடில்லி: டில்லியில், ராணுவ அதிகாரி போல் நடித்து பெண் டாக்டரை பலாத்காரம் செய்த, 'அமேசான்' நிறுவன பொருட்களை, 'டெலிவரி' செய்யும் நபர் கைது செய்யப்பட்டார்.
டில்லியில் உள்ள சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, 'இன்ஸ்டா கிராம்' சமூக ஊடகம் வாயிலாக, ஆரவ் மாலிக் என்பவர் சில மாதங்களுக்கு முன் அறிமுகமானார். தன்னை ராணுவ அதிகாரி எனக் கூறியதை அடுத்து, அவரின், 'மொபைல் போன்' எண்ணை இளம்பெண் வாங்கினார்.
கடந்த ஏப்., - செப்., வரை காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டதாக கூறி, பெண் டாக்டரை ஆரவ் மாலிக் ஏமாற்றினார். ராணுவ சீருடையில் உள்ள புகைப் படங்களையும் அனுப்பினார். இதை நம்பிய இளம்பெண், ஆரவ்வை வீட்டிற்கு அழைத்தார்.
அப்போது, பெண் டாக்டருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்த அவர், அங்கிருந்து தப்பிச் சென்றார். மயக்கம் தெளிந்த பின் ஏமாற்றப்பட்டதை அறிந்து, போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார், சத்தர்பூரில் பதுங்கியிருந்த ஆரவ்வை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், அவர் ராணுவ அதிகாரி இல்லை என்பதும், 'அமேசான்' நிறுவனத்தின் டெலிவரி ஊழியராக பணிபுரிந்ததும் தெரியவந்தது.

