ADDED : டிச 19, 2024 05:27 PM

புதுடில்லி: '' அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
டில்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுலும், காங்., தலைவர் கார்கேயும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
கண்டனம்
அப்போது கார்கே கூறியதாவது: அம்பேத்கர் குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து வரும் கருத்துகள் துரதிர்ஷ்டவசமானவை. உண்மைகளை தெரியாமல், அமித்ஷா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.நேருவை விமர்சிப்பதற்கு முன்னரும், அம்பேத்கரை இழிவுபடுத்துவதற்கு முன்னரும் அவர் முதலில் உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.பார்லிமென்ட் நடவடிக்கைகளை இடையூறு செய்வது எங்கள் எண்ணம் அல்ல. நாங்கள் 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். முக்கியமான விஷயமாக அதானி விவகாரம் இருந்தது. ஆனால், அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 வது ஆண்டை முன்னிட்டு நடந்த சிறப்பு விவாதத்தில், அமித்ஷா அம்பேத்கரை அவமதித்தார். இதுதான் அரசியல் கட்சி அல்லது தலைவரின் மனநிலையாக இருந்தால், அது கண்டனத்திற்கரியது.
தடுத்தனர்
அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறுகிறோம். அது நடக்காது என்பது தெரிந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அமித்ஷாவின் கருத்தை திசைதிருப்ப பா.ஜ., சதி செய்கிறது. இதனால் தான் மற்ற விவகாரங்களை எழுப்பி வருகிறது. பா.ஜ., எம்.பி.,க்கள் தான் எங்களை பார்லிமென்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். என்னை அவர்கள் தள்ளிவிட்டனர். இதனால், நிலைதடுமாறி கீழே அமர்ந்துவிட்டேன். அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு கார்கே கூறினார்.
ராஜினாமா
பிறகு ராகுல் கூறியதாவது: அதானி குறித்த விவகாரத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக, விவாதத்தை பா.ஜ., தவிர்த்து வந்தது. இதற்கு பிறகு அமித்ஷா ஒரு கருத்தை தெரிவித்தார். பா.ஜ.,வின் கொள்கைகள் அரசியலமைப்பு மற்றும் அம்பேத்கருக்கு எதிரானவை என ஆரம்பம் முதல் கூறி வருகிறோம். இந்த இரண்டுக்கும் எதிராக பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., சிந்தித்து வருகிறது. திசை திருப்பும் முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டு வருகிறது. அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைவர் முன்பும் அவரது மனநிலையை காட்டி விட்டார். அவர் பதவி விலக வேண்டும் எனக்கூறி வருகிறோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அம்பேத்கர் சிலையில் இருந்து பார்லிமென்டிற்கு சென்றோம். ஆனால், படியில் நின்று கொண்டு இருந்த பா.ஜ., எம்.பி.,க்கள் எங்களை பார்லிமென்டிற்குள் நுழைய அனுமதி மறுத்தனர். ஆனால், உண்மையில், அவர்கள் அம்பேத்கரை அவமதித்தனர். உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். இவ்வாறு ராகுல் கூறினார்.