ADDED : ஜன 29, 2025 08:09 PM

வாரம் முழுதும் ஒய்வின்றி பணியாற்றும் பலருக்கு, வார இறுதி நாட்களில் எங்காவது சென்று, நிம்மதியாக பொழுது போக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுவது சகஜம்தான். இவர்களுக்கு தப்பகுளி பெஸ்ட் சாய்ஸ்.
பெங்களுரு போன்ற பரபரப்பான நகரங்களில் வசிக்கும் மக்கள், வாரம் முழுதும் ஓய்வின்றி பணியாற்றுகின்றனர். மனதும், உடலும் ஓய்வை தேடும் போது, அமைதியான இடங்களுக்கு சென்று பொழுது போக்க விரும்புவர். இத்தகைய இடங்கள் எங்குள்ளது என, கூகுளில் தேடுவர். பெங்களூருக்கு அருகிலேயே அருமையான சுற்றுலா தலங்கள் ஏராளம். இதில் தப்பகுளியும் ஒன்றாகும்.
இந்த இடம் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லை. ஆனால், இது சுற்றுலா பயணியரின் சொர்க்கமாகும். காவிரி ஆற்றங்கரையில் அமர்ந்து இயற்கையை ரசிக்கலாம். உற்சாகமாக மீன் பிடிக்கலாம். நண்பர்கள், குடும்பத்துடன் பொழுது போக்க அற்புதமான இடமாகும்.
பெங்களூரில் இருந்து 110 கி.மீ., தொலைவில் ராம்நகர், மாகடியில் தப்பகுளி உள்ளது.
கனகபுரா அருகில் உள்ளது. இங்கு பாயும் காவிரி ஆற்றில் ஸ்படிகம் போன்று தண்ணீர் மிகவும் துாய்மையாக இருக்கும்.
பெங்களூரில் இருந்து சாலை வழியாக பயணித்தால், மூன்று மணி நேரத்தில் இந்த இடத்தை அடையலாம்.
இங்கிருந்து சில கி.மீ., தொலைவில் தமிழகம் உள்ளது. தப்பகுளியின் மேற்புறம் மேகதாது, கீழ்ப்புறம் ஒகனேக்கல் நீர் வீழ்ச்சி உள்ளது. தப்பகுளியில் இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது.
ஆற்றங்கரையில் நின்று சுற்றிலும் பார்த்தால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பச்சை பசேல் என்ற கண்களுக்கு குளிர்ச்சியான காட்சிகள் தென்படும். வார இறுதியில் பொழுது போக்க தகுந்த இடமாகும்.
குளித்து மகிழ, பைக் சவாரி செய்ய ஏற்ற இடம். வன விலங்குகளை அருகில் இருந்து பார்க்கலாம். வன விலங்குகள் சரணாலயத்தில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதியில் ஹொள்ளகெரே தப்பகுள்ளேஸ்வரர் கோவில் உள்ளதால், கோவில் வரை வாகனம் செல்ல அனுமதி உள்ளது
இப்பகுதிக்கு கார், பைக்குகளில் செல்வோர் பஞ்சர் கிட் கொண்டு செல்வது நல்லது. ஏன் என்றால் சுற்றுப்பகுதிகளில் பஞ்சர் கடைகள் இல்லை. ரெஸ்டாரென்ட்களும் இல்லை.
எனவே கனகபுராவில் இருந்தே உணவு, தின்பண்டங்கள், குடிநீர் கொண்டு செல்லுங்கள். காவிரி ஆற்றில் இறங்கும் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும். சுற்றுலா பயணியர் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள், குடும்பத்துடன் சென்று நிம்மதியாக பொழுது போக்கிவிட்டு வரலாம். மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
எப்படி செல்வது?
மாகடியில் இருந்து 18 கி.மீ., துாரத்தில் தப்பகுளி உள்ளது. பெங்களூரு, மைசூரு, துமகூரு உட்பட முக்கிய நகரங்களில் இருந்து மாகடிக்கு அரசு பஸ்கள், ரயில் வசதி உள்ளது. தனியார் வாகனங்களும் இயக்கப்படுகின்றன. மாகடியில் தரமான ஹோட்டல்கள், லாட்ஜ்கள் உள்ளன.
- நமது நிருபர் -

