எட்டே மாதத்தில் விழுந்து நொறுங்கிய சிவாஜி சிலை: மீண்டும் கட்டுவோம் என்கிறார் மஹா., துணை முதல்வர்
எட்டே மாதத்தில் விழுந்து நொறுங்கிய சிவாஜி சிலை: மீண்டும் கட்டுவோம் என்கிறார் மஹா., துணை முதல்வர்
ADDED : ஆக 28, 2024 07:03 AM

மும்பை: 'சிவாஜி சிலை விழுந்து உடைந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம்.உடைந்த இடத்தில் மீண்டும் சிவாஜி சிலை கட்டுவோம்' என மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் தெரிவித்தார்.
இந்திய கடற்படை தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்படை சார்பில், கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி மஹாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில், 35 அடி உயர சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். திறக்கப்பட்டு எட்டு மாதத்தில், ஆக.,26ம் தேதி பலத்த காற்றின் காரணமாக, சிவாஜயின் சிலை கீழே விழுந்து நொறுங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியது.
மீண்டும் அதே இடத்தில்!
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் தேவேந்திர பட்னாவீஸ் கூறியதாவது: சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது சோகமான நிகழ்வு. இதனை அரசியல் ஆக்க வேண்டாம். சிலை அமைக்கும் போது காற்றின் வேகத்தை சிற்பி ஆய்வு செய்யவில்லை.
கடற்படை உதவியுடன் இதே இடத்தில் புதிய சிலையை நாங்கள் கட்டுவோம். சிவாஜி சிலை உடைந்த நிலையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. சிவாஜியின் படையை சேர்ந்தவர்கள் இவ்வாறு புகைப்படங்கள் எடுக்கமாட்டார்கள். இதனை ஜனநாயக ரீதியில் நாங்கள் முறியடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

