ADDED : அக் 20, 2024 12:27 AM

கோழிக்கோடு: வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவை எதிர்த்து, பா.ஜ., சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலர் நவ்யா ஹரிதாஸ், 36, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், வயநாடு லோக்சபா எம்.பி.,யாக வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலி எம்.பி., பதவியை தக்க வைத்துக் கொண்டு, வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அத்தொகுதிக்கு, நவம்பர் 13ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா, இடது ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சத்யன் மொகேரி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பா.ஜ., சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலரும், கோழிக்கோடு மாநகராட்சி கவுன்சிலருமான நவ்யா ஹரிதாஸ் நேற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இது குறித்து நவ்யா கூறுகையில், ''வயநாடு தொகுதியில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. காங்கிரசால் அந்த திட்டங்களை செயல்படுத்த முடியாது.
''எப்போதாவது தொகுதிக்கு வரும் எம்.பி., தேவையில்லை. எப்போதும் தங்களுடன் இருக்கும் ஒருவரையே வயநாடு மக்கள் விரும்புகின்றனர்,'' என்றார்.