ADDED : ஜன 29, 2025 01:40 AM
ராஞ்சி : ஜார்க்கண்டில் உள்ள வனப்பகுதி நிறைந்த மாவட்டமான லாதேஹாரில், நக்சலைட் அமைப்பில் இருந்து பிரிந்த ஜே.எஸ்.எம்.எம்., எனப்படும் ஜார்க்கண்ட் சங்கர்ஷ் முக்தி மோர்ச்சதே அமைப்பின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.
அரசால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பினர், தங்களின் பண தேவைக்காக அப்பகுதியில் உள்ள வியாபாரிகள், நிலம் வைத்திருப்பவர்களை கடத்தி வைத்து மிரட்டி, பணம் பறிக்கும் செயலில் அவ்வப் போது ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், லாதேஹார் மாவட்டம் பாரி கிராமத்தில் உள்ள செங்கல் சூளைக்கு ஜே.எஸ்.எம்.எம்., அமைப்பின் தலைவர் அபய் நாயக் உட்பட ஏழு பேர் நேற்று சென்றனர்.
அதன் உரிமையாளரை மிரட்டி பணம் கேட்டனர். அப்போது சூளையில் வேலை பார்த்த கிராமத்தினர் ஒன்று திரண்டு ஜே.எஸ்.எம்.எம்., அமைப்பினரை தாக்கினர்.
இதில் அமைப்பின் தலைவர் அபய் நாயக் மற்றும் இருவர் படுகாயமடைந்தனர். மற்ற நான்கு பேர் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் மூவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அபய் நாயக் உயிரிழந்தார். மற்ற இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

