அன்னபூரணி திரைப்பட சர்ச்சை: மன்னிப்பு கேட்டார் நயன்தாரா
அன்னபூரணி திரைப்பட சர்ச்சை: மன்னிப்பு கேட்டார் நயன்தாரா
UPDATED : ஜன 20, 2024 05:11 PM
ADDED : ஜன 20, 2024 01:14 AM

புதுடில்லி: ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றதாக அன்னபூரணி திரைப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த படத்தின் நாயகி நயன்தாரா, மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
நயன்தாரா, ஜெய் நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் கடந்த டிசம்பரில் திரையரங்கில் வெளியானது. பின், ஓ.டி.டி., எனும் இணைய ஒளிபரப்பு தளத்தில் வெளியானது. இந்த படத்தில் பிராமண பெண்ணான நயன்தாரா, புர்கா அணிந்து மாமிசம் சமைப்பது போன்றும், ராமர் வனவாசத்தின் போது அசைவம் சாப்பிட்டதாகவும் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நயன்தாரா மற்றும் பட தயாரிப்பு குழுவினர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில், கவனக்குறைவாக ஏற்பட்ட நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்பதாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெய் ஸ்ரீராம் என தலைப்பிட்டு நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தடைகளை மன உறுதியுடன் கடந்து முன்னேறும் ஒருவரின் வாழ்க்கை பயணத்தை பிரதிபலிப்பது தான் அன்னபூரணி திரைப்படத்தின் நோக்கம். தணிக்கை செய்யப்பட்டு திரையரங்கில் வெளியான படம், ஓ.டி.டி.,யில் இருந்து நீக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நேர்மறையான செய்தியை பகிரும் முயற்சியில் கவனக்குறைவாக இருந்திருக்கலாம்; அது சிலரை காயப்படுத்தி இருக்கலாம்.
இந்த பிரச்னையின் தீவிரத்தன்மையை புரிந்து கொள்கிறோம். யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கோ, என் குழுவினருக்கோ கிடையாது. கடவுள் நம்பிக்கை உள்ள நான் எதையும் உள்நோக்கத்தோடு செய்ய வில்லை. இதனால் யார் மனது புண்பட்டதோ அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.