மஹா., துணை முதல்வராக இன்று பதவியேற்கிறார் அஜித் பவார் மனைவி
மஹா., துணை முதல்வராக இன்று பதவியேற்கிறார் அஜித் பவார் மனைவி
UPDATED : ஜன 31, 2026 12:41 AM
ADDED : ஜன 30, 2026 08:43 PM

மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார், பாராமதி செல்லும் போது நேற்று முன்தினம் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் மஹாராஷ்டிரா அமைச்சரவையில் நிதித்துறை, விளையாட்டுத்துறை மற்றும் மாநில சுங்கத்துறை ஆகிய துறைகளை கவனித்து வந்தார்.
அஜித் பவார் மறைவைத் தொடர்ந்து அவரது கட்சியில் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. கட்சியின் அடுத்த தலைவர் யார்? தாய்க்கட்சியுடன் இணைப்பு என பல கேள்விகள் எழுந்தன. இது குறித்து பல யூகங்கள் கிளம்பின.
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் படேல் உள்ளிட்டோர் முதல்வர் பட்னாவிசை சந்தித்து பேசினர். அப்போது அஜித் பவார் வகித்த பொறுப்புகளை தங்களது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா, எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா துணை முதல்வராக சுநேத்ரா பவார் இன்று பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், அம்மாநிலத்தின் முதல் பெண் துணை முதல்வர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கிறது. சுநேத்ரா தற்போது ராஜ்யசபா எம்பி ஆக உள்ளார். அஜித்பவார் மறைவு காரணமாக காலியாகிஉள்ள பாராமதி தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

