யம்மாடியோவ்...! நீரஜ் சோப்ராவின் மலைக்க வைக்கும் சொத்து!
யம்மாடியோவ்...! நீரஜ் சோப்ராவின் மலைக்க வைக்கும் சொத்து!
ADDED : ஆக 13, 2024 10:11 AM

புதுடில்லி : ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவின் சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் மலைக்க வைப்பதாக உள்ளது.
பெருமை
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்று அனைத்து இந்திய ரசிகர்களையும் பெருமை கொள்ள செய்து விட்டார் நீரஜ் சோப்ரா. நாடு முழுவதிலும் இருந்து அவருக்கு குவிந்து வரும் வாழ்த்துகள் இன்னமும் முற்று பெறவில்லை. ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற அர்ஷ்த் நதீமுக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சுவாரசியம்
வாழ்த்து மழையில் இருவரும் நனைந்து கொண்டிருந்தாலும் விளையாட்டை கடந்து அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளி வந்திருக்கிறது.
ரூ.37 கோடி
இவர்களில் நீரஜ் சோப்ராவின் சொத்து விவரங்கள் மலைக்க வைப்பதாக உள்ளது. விருதுகள், ராணுவத்தில் பணி என பெருமைக்கு சொந்தக்காரரான நீரஜின் தற்போதைய சொத்து மதிப்பு 37 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. இவரின் மாத வருமானம் மட்டுமே 30 லட்சம் ரூபாய்.
ஆண்டு வருமானம்
இவரின் வருமானமானது, அவர் கலந்து கொண்ட போட்டிகளில் பெற்ற பரிசுத் தொகை, ஒப்பந்தங்கள், ராணுவ அதிகாரி பணியில் கிடைக்கும் ஊதியம் என பல வகையான ஆதாரங்களில் இருந்து வகைப்படுத்தப்பட்டு கணக்கிடப்பட்டு உள்ளது. வருமான ஆதாரங்கள் பல வழிகளில் இருந்து வந்தாலும் மாதம் 30 லட்சம் ரூபாய், ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் வரை உத்தேசமாக வருமானத்தை கொண்டுள்ளார்.
சொகுசு பங்களா
வருமான விவரமே ஆச்சரியத்தை அளித்தாலும், மற்றொரு பக்கம் அவரின் சொகுசு பங்களா பார்ப்போரை அசர வைப்பதாக இருக்கிறது. ஹரியானாவில் பானிபட் அருகில் 3 அடுக்குமாடி சொகுசு பங்களா அவருக்கு உள்ளது. விளையாட்டில் சாதனையாளரான நீரஜ்க்கு வாகனங்கள் மீதும் அளவில்லா காதல் உண்டு.
ரேஞ்ச் ரோவர்
ரூ.2 கோடி மதிப்பில் ரேஞ்ச் ரோவர் சொகுசு கார், போர்டு, டொயோட்டா, மஹிந்தரா நிறுவனங்களின் சொகுசு கார்களையும் நீரஜ் சோப்ரா வைத்துள்ளார். ஹார்ட்லி டேவிட்சன், பல்சர் என உயர் ரக இருசக்கர வாகனங்களையும் வைத்து இருக்கிறார்.விளம்பரதாரர்
பல்வேறு முன்னணி நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் நீரஜ் இருப்பதால் அதில் இருந்தும் ஆண்டுதோறும் வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.
விலை உயர்ந்த சொத்து
இவை எல்லாவற்றையும் விட நீரஜ் சோப்ராவிடம் இருக்கும் உயர்ந்த சொத்து, அவரது தன்னடக்கமும் தன்னை வென்ற போட்டியாளரை போற்றி பாராட்டும் உயர்ந்த குணமும் தான்.
ரூ.1 கோடி
நீரஜ் வருமானத்துடன் அர்ஷித் நதீம் சொத்தை ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு, அவருக்கு 1 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே சொத்து மதிப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது அவர் தங்கப்பதக்கம் பெற்ற நிலையில், வருமான நிகர மதிப்பு மேலும் உயரும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.