UPDATED : ஜூன் 29, 2025 07:37 AM
ADDED : ஜூன் 29, 2025 05:59 AM

புதுடில்லி: டில்லியில் நேரு நினைவு நுாலகம், பார்லிமென்ட் அருகே, 'தீன் மூர்த்தி' பவனில் இருந்தது. இது, மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ், ஒரு சுயாட்சி நிறுவனமாக செயல்பட்டு வந்தது. பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின், அந்த நுாலகம் பிரதமர்களின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, கலாசார அமைச்சக பொறுப்பில் உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில், அனைத்து பிரதமர்களின் வரலாறு, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், எழுதிய கடிதங்கள் என பல ஆவணங்கள் உள்ளன. சமீபத்தில், இந்த அருங்காட்சியகம் நிர்வகிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடந்தது.
அருங்காட்சியகத்தில், முன்னாள் பிரதமர்களான இந்திரா, ராஜிவ், நரசிம்ம ராவ், தேவ கவுடா, மற்றும் ஐ.கே.குஜ்ரால் உட்பட, பல பிரதமர்கள் எழுதிய கடிதங்கள் உள்ளன; ஆனால், நேருவின் கடிதங்கள் இல்லை. எனவே, அவற்றைக் கொண்டுவர வேண்டும் என, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாம். 'இந்த கடிதங்கள் அனைத்தையும், புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும்' எனவும் முடிவெடுக்கப்பட்டதாம்.
கடிதம் எழுதுவதை தன் முக்கிய பழக்கமாக கொண்ட நேரு, கிட்டத்தட்ட 4,000 கடிதங்களை எழுதி உள்ளாராம். மவுன்ட் பேட்டன், அவரது மனைவி உட்பட பல தலைவர்களுக்கு, நேரு எழுதிய கடிதங்கள் அனைத்தையும், சோனியா, பல பெட்டிகளில் எடுத்துச் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இது, காங்., ஆட்சியில் தான் நடந்தது.
பா.ஜ., ஆட்சிக்கு வந்த 2014லிருந்து, இதுவரை எட்டு கடிதங்கள் சோனியாவிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாம். 'நேருவின் கடிதங்கள் அனைத்தையும், பிரதமர் அருங்காட்சியகத்திற்கு ஒப்படையுங்கள்' என, கடிதங்கள் எழுதியும், இதுவரை எந்த பதிலும் இல்லையாம். எனவே, 'இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்' என, சொல்லப்படுகிறது.