இரவு நேர தங்குமிடமாக சமூக கூடங்கள் மாற்றம் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் நடவடிக்கை
இரவு நேர தங்குமிடமாக சமூக கூடங்கள் மாற்றம் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் நடவடிக்கை
ADDED : ஜன 25, 2026 07:01 AM

புதுடில்லி: தலைநகர் டில்லியில் கடுங்குளிர் வாட்டும் நிலையில், அரசு மருத்துவமனைகளுக்கு அருகேயுள்ள சமூக கூடங்கள் இரவு நேர தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் துணைத் தலைவர் குல்ஜீத் சிங் சஹால் வெளியிட்டுள்ள அறிக்கை:
தலைநகர் டில்லியில் கடுங்குளிர் நிலவுகிறது. அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளின் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்தில் கடுங்குளிரில் தவிக்கின்றனர்.
இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி டில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து, அரசு மருத்துவமனைகளுக்கு அருகேயுள்ள சமூக கூடங்கள் இரவு நேர தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. மார்ச் 15ம் தேதி வரை சமூக கூடங்கள் இரவு நேர தங்குமிடங்களாக செயல்படும்.
எய்ம்ஸ், டாக்டர் ராம் மனோகர் லோஹியா, லேடி ஹார்டிங் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், அருகில் உள்ள சமூகக் கூடங்களில் எந்தக் கட்டணமும் இன்றி தங்கலாம். தங்குவோருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கூடங்களை தினமும் கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடம், தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை புதுடில்லி முனிசிபல் கவுன்சிலும், படுக்கைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை டில்லி நகர்ப்புற மேம்பாட்டு வாரியமும் வழங்குகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

