இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்தது இல்லை; நேரில் பார்த்தவர்கள் பேட்டி
இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்தது இல்லை; நேரில் பார்த்தவர்கள் பேட்டி
UPDATED : பிப் 16, 2025 09:47 AM
ADDED : பிப் 16, 2025 09:12 AM

புதுடில்லி: 'இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்தது இல்லை' என டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியானார்கள். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர்.
மீட்பு பணியில் ஈடுபட்ட ரயில்வே போலீசார் கூறியதாவது: அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடினர். நாங்கள் கூட்டத்தை கட்டுபடுத்த முயற்சி செய்தோம். நாங்கள் கூறியதை மக்கள் கேட்கவில்லை. அதிக எண்ணிக்கையில் பிளாட்பாரத்தில் கூடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டோம். விபத்தை தடுக்க நிர்வாகம் கடுமையாக உழைத்தது. ஆனால் யாரும் கேட்கவில்லை. காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க உதவி செய்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் சகோதரர் சஞ்சய் கூறியதாவது: நாங்கள் 12 பேர் மஹா கும்பமேளாவுக்குச் சென்று கொண்டிருந்தோம். நான் ரயிலின் படிக்கட்டுகளில் இருந்தேன். என் சகோதரி உட்பட என் குடும்பத்தினர் கூட்டத்தில் சிக்கிக்கொண்டனர். அரை மணி நேரத்திற்குப் பிறகு, எனது சகோதரி இறந்த நிலையில் அவரது உடலை நாங்கள் கண்டுபிடித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறியதாவது: நெரிசலில் என் அம்மா இறந்துவிட்டார். நாங்கள் பீஹார் மாநிலம் சாப்ராவில் உள்ள எங்கள் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தோம். இது ஏன் நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, இவ்வளவு பேர் திடீரென்று வந்து ஒருவரையொருவர் தள்ளிக்கொள்ளத் தொடங்கினர். கூட்ட நெரிசலை கட்டுபடுத்த போலீசார் யாரும் இல்லை, என்றார்.
விபத்தை நேரில் பார்த்த மற்றொருவர் கூறுகையில், ' ரயில் நிலையத்தில் எல்லையை மீறி கூட்டம் இருந்தது. இவ்வளவு பெரிய கூட்டம் எதிர்பார்க்கப்படவில்லை. பண்டிகைகளின் போது கூட ரயில் நிலையத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்ததில்லை. நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் போராடி பார்த்தனர். ஆனால் அவர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.' என்றார்.

