100 ஆண்டு சட்டங்களுக்கு மாற்றாக இந்தோனேஷியாவில் புதிய சட்டங்கள் அமல்
100 ஆண்டு சட்டங்களுக்கு மாற்றாக இந்தோனேஷியாவில் புதிய சட்டங்கள் அமல்
ADDED : ஜன 03, 2026 03:39 AM

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில், 100 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த டச்சு காலனித்துவ கால சட்டங்கள் நீக்கப்பட்டு, அந்நாட்டின் புதிய தண்டனை சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், 1918 முதல் அமலில் இருந்த டச்சு காலனித்துவ சட்டங்கள், 1945ல், இந்தோனேஷியா விடுதலை பெற்ற பிறகும், 80 ஆண்டு களுக்கு மேலாக புழக்கத்தில் இருந்தன. இவை, காலாவதியானவை என பரவலாக விமர்சிக்கப் பட்டன.
இந்நிலையில், டச்சு காலனித்துவ சட்டங்களுக்கு மாற்றாக, இந்தோனேஷியாவின் சொந்த கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாக வைத்து, தற்போதைய கால கட்டத்துக்கு ஏற்றபடி புதிய தண்டனை சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய சட்டத்தின்படி, திருமணத்திற்கு புறம்பான உடலுறவு குற்றமாக அறிவிக்கப்பட்டு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'லிவிங் டு கெதர்' எனும் திருமணமின்றி ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது தடை செய்யப்பட்டுள்ளது. இக்குற்றத்துக்கு ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை உண்டு.
ஆனால், இந்த இரு குற்றங்களுக்கும், சம்பந்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் அதாவது, கணவன் - மனைவி, பெற்றோர் அல்லது பிள்ளைகள் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் அதிபர், துணை அதிபர் அல்லது அரசு நிறுவனங்களை அவதுாறு செய்வது, தற்போதைய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம். இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
முக்கிய திருத்தமாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு, 10 ஆண்டுகள் 'நன்னடத்தை காலம்' வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த 10 ஆண்டுகளில், குற்றவாளியின் நடத்தை திருப்தியாக இருந்தால், மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும். புதிய தண்டனைச் சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
'புதிய சட்டம் பேச்சு சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமைகளை பாதிக்கும்' என, மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக, சிறுபான்மையினர் மற்றும் ஊடகவியலாளர்கள் இந்த சட்டத்தின் வாயிலாக ஒடுக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

