புதிய ஆயுள் காப்பீடு பாலிசி வர்த்தகம் 15.67 சதவிகித்ம் வளர்ச்சி
புதிய ஆயுள் காப்பீடு பாலிசி வர்த்தகம் 15.67 சதவிகித்ம் வளர்ச்சி
ADDED : டிச 12, 2024 01:29 AM

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், புதிய ஆயுள் காப்பீடு பாலிசி பிரீமிய வர்த்தகம் 15.67 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து, ஆயுள் காப்பீடு கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் வருமாறு:
நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், புதிய ஆயுள் காப்பீடு பாலிசி வர்த்தகம் 2.44 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, இது 15.67 சதவீத வளர்ச்சியாகும்.
இதில், எல்.ஐ.சி., 16.08 சதவீத வளர்ச்சி கண்டு, 1.44 லட்சம் கோடி ரூபாய் முதல் பிரீமியத்துடன் புதிய பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. மீதமுள்ள 1 லட்சம் கோடி ரூபாய் ஆயுள் காப்பீடு பிரீமிய வர்த்தகத்தை, தனியார் காப்பீடு நிறுவனங்கள் பெற்றன.
எனினும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், சென்ற மாதத்தில் ஆயுள் காப்பீடு பாலிசிகளின் முதல் பிரீமிய வர்த்தகம் 4.5 சதவீதம் சரிவு கண்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, எல்.ஐ.சி., முதல் பிரீமியம் 27.17 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. தனியார் நிறுவனங்கள் 30.84 சதவீத சரிவு கண்டன.
முழு பிரீமியம் செலுத்தி, ஓராண்டு நிறைவடைந்த பாலிசிகளை சரண்டர் செய்யும்போது, சிறப்பு சரண்டர் மதிப்பில் பாலிசிதாரர்களுக்கு பணம் வழங்கும் புதிய விதிமுறை, கடந்த அக்டோபர் முதல் அமலுக்கு வந்தது.
இதற்கு முன், ஓராண்டில் பாலிசியை சரண்டர் செய்வோருக்கு, இது போன்ற தொகையை ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் வழங்கியதில்லை. எனவே, கூடுதல் செலவையும் உள்வாங்கிய நிலையில், முதல் பிரீமிய வர்த்தக சரிவையும் அவை சந்தித்துள்ளன.

