ADDED : டிச 17, 2024 05:00 AM

பெலகாவி: ''மாநிலத்தில் சிசேரியன் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய கொள்கை வகுக்க அரசு திட்டமிட்டுள்ளது, என சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், சுயேச்சை உறுப்பினர் ஜெகதேவ் குத்தேதாரின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
சமீப நாட்களாக மாநிலத்தில் கர்ப்பிணியருக்கு சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை அதிகரிக்கிறது. தனியார் மருத்துவமனையில், இது ஒரு மாபியாவாக மாறியுள்ளது. எளிதில் சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருந்தும், தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் செய்கின்றனர். இதை தடுக்க புதிய கொள்கை வகுக்கப்படும்.
கடந்த 2020 - 21ல், 30 சதவீதம், 2021 - 22ல், 35 சதவீதம், 2022 - 23ல், 38 சதவீதம், 2023 - 24ல் 46 சதவீதம் சிசேரியன் நடந்துள்ளது. இதை தடுக்க அரசு ஆலோசிக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் பணத்தாசையால், அவசியம் இல்லை என்றாலும், சிசேரியன் செய்கின்றனர். டாக்டர்கள் பணம் சம்பாதிக்க, இதை ஒரு வழியாக்கி கொண்டுள்ளனர்.
கர்ப்பிணியரை சுக பிரசவத்துக்கு, மானசீகமாக தயாராக்க சிறப்பு வல்லுனர்கள் மூலம் ஆலோசனை கூறப்படுகிறது. ஆனால் சிலர், சிசேரியன் செய்து கொள்ள விரும்புகின்றனர். இதற்கு அரசு என்ன முடியும்.
மாநிலத்தில் கருக்கொலையை தடுக்க, அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. பெலகாவி, கோலார், பெங்களூரு ரூரல் உட்பட, பல மாவட்டங்களில் 45 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

