60 நாட்களில் குற்றப்பத்திரிகை; கோர்ட் வகுத்தது புதிய நெறிமுறை
60 நாட்களில் குற்றப்பத்திரிகை; கோர்ட் வகுத்தது புதிய நெறிமுறை
ADDED : அக் 30, 2025 08:04 AM

குற்ற வழக்குகளில், 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு முன், ஜாமின் வழக்கு ஒன்று நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் இருந்ததை அறிந்து நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நாடு முழுதும் உள்ள குற்ற வழக்குகளில், குற்றபத்திரிகை சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்படாததால் பலரும் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டு இருப்பதாக கூறிய நீதிபதிகள், இந்த பிரச்னையை சரி செய்யும் வகையில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவ, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகமுத்து மற்றும் மூத்த வழக்கறிஞர் சித்தார்த்ரா ஆகியோரை நியமித்தனர்.
அதோடு, 'இந்த விவகாரத்தில் மத்திய அரசு கருத்துகளை தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -

