சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களுக்கு பரிசு: டில்லியில் புது திட்டம் அறிமுகம்
சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களுக்கு பரிசு: டில்லியில் புது திட்டம் அறிமுகம்
ADDED : பிப் 25, 2026 08:43 PM

புதுடில்லி: சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தை டில்லி அரசு அறிமுகம் செய்துள்ளது.
மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்கு ரே வீர் என பெயர் சூட்டப்பட்டு முதல்முறையாக டில்லியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக டில்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சாலை விபத்துகளில் படுகாயம் அடைந்துள்ளவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். ஒரே விபத்தில் பலருக்கு ஒருவரே உதவி செய்திருந்தாலும் பரிசுத்தொகை 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே.
இத்துடன் இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்ட 10 பேருக்கு தலா 1 லட்ச ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
காயம் அடைந்தவர்களுக்கு விரைவில் மருத்துவ உதவி கிடைப்பதன் மூலம் அவர்களின் உயிர் காப்பாற்றப்படும். காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மக்களை ஊக்குவிப்பதற்காகவே இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அதிகாரிகள் சிலர் கூறியதாவது; சாலை விபத்துகளில் காயம் அடைபவர்களுக்கு உதவினால் சட்ட சிக்கல் வரும், போலீஸ் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது. இதனால், பலர் உதவி செய்வதற்கு தயங்குகின்றனர். அவர்களின் தயக்கத்தை போக்கி, உதவி செய்வதை தூண்டும் வகையில் சட்ட பாதுகாப்பும் இந்த திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

