கான்ஸ்டபிளுக்கு கமாண்டோ பயிற்சி மாநகரப் போலீஸ் புது திட்டம்
கான்ஸ்டபிளுக்கு கமாண்டோ பயிற்சி மாநகரப் போலீஸ் புது திட்டம்
ADDED : டிச 21, 2024 10:43 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் இனி, என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகப்புப் படை மற்றும் 'ஸ்வாட்' கமாண்டோக்கள் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. டில்லி மாநகரப் போலீசில் புதிதாக சேர்ந்துள்ள போலீசாருக்கு சிறப்பு கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் பயிற்சிப் பிரிவு சிறப்புக் கமிஷனர் சாயா சர்மா கூறியதாவது:
பயங்கரவாதிகள் தாக்குதல் போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால், தேசிய பாதுகாப்புப் படை மற்றும் ஸ்வாட் கமாண்டோக்களுக்கு தகவல் அளிக்கப்படும். ஆனால், இனி அவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. சூழ்நிலையை சமாளிக்க, முதற்கட்டமாக 25 போலீசாருக்கு மானேசர் தேசிய பாதுகாப்புப் படையில் இரண்டு வார சிறப்பு கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டுளது.
மேலும், 300 பேருக்கு இந்தப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, கூடுதலாக தேவைப்படும் எண்ணிக்கையில் போலீசாருக்கு சிறப்பு கமாண்டோ பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 50 போலீசாருக்கான பயிற்சி பிப்ரவரியில் துவங்குகிறது.
புதிதாக பணியமர்த்தப்படும் போலீசாருக்கு ஜரோடா கலனில் ஒரு மாதப் பயிற்சியும், ராஜஸ்தானின் அல்வாரில் உள்ள அபன்பூரில் மூன்று மாத மேம்பட்ட கமாண்டோ பயிற்சியும் அளிக்கப்படும். முதற்கட்டமாக நவீன ரக துப்பாக்கிகளை பயன்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிகாக என்.எஸ்.ஜி.,யிடம் பயிற்சி பெறுவது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
சிறப்பு கமாண்டோ பயிற்சி பெற்ற போலீசார் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவர். வணிக வளாகங்கள், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான சூழ்நிலை உள்ள இடங்களில் சிறப்பு கமாண்டோக்கள் நிறுத்தப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு கமாண்டோ பயிற்சி பெற்றுள்ள 25 பேரில் ஒருவரான கான்ஸ்டபிள் ஆஷிஷ் மாலிக் கூறியதாவது, “கடந்த 2023ல் டில்லி மாநகரப் போலீசில் சேர்ந்தேன். மூன்று மாதங்கள் மேம்பட்ட கமாண்டோ பயிற்சி அனைவருக்கும் கட்டாயமாக அளிக்கப்பட்டது. எந்தவொரு அசாதாரண சூழ்நிலையையும் முதலில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். என்.எஸ்.ஜி., மற்றும் ஸ்வாட் படைகள் வரும் வரை நிலைமையை சமாளிக்க பயிற்சி பெற்றுள்ளோம். சி.எம்.ஜி., எனப்படும் கார்பன் மெஷின் கன், ஜே.வி.பி.சி., எனப்படும் ஜாயின்ட் வென்ச்சர் ப்ரொடெக்டிவ் கார்பைன், எம்.பி. -5 சப்மஷைன் கன் மற்றும் க்ளோக் - 17 கைத்துப்பாக்கிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது,”என்றார்.
மற்றொரு கான்ஸ்டபிள் மனோஜ் கோடன், “தாஜ் ஹோட்டலில் 26/11 தாக்குதலின் போது பயங்கரவாதிகள் பயன்படுத்திய கண்ணீர்ப்புகையை கையாளும் நுட்பங்களையும் பயிற்சி முகாமில் கற்றுக் கொடுத்தனர்,”என்றார்.