தேசிய கொடிகள் மறுசுழற்சிக்கு புதிய அறிவியல் மாதிரி அறிமுகம்
தேசிய கொடிகள் மறுசுழற்சிக்கு புதிய அறிவியல் மாதிரி அறிமுகம்
ADDED : நவ 27, 2025 11:34 PM

புதுடில்லி: பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட தேசிய கொடிகளை, கண்ணியமான முறையில் மறுசுழற்சி செய்வதற்கான நாட்டின் முதல் அறிவியல் மாதிரியை, என்.டி.டி.எம்., எனும் தேசிய தொழில்நுட்ப துணிகள் இயக்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக ஐ.ஐ.டி., டில்லியின் கட்டுப்பாட்டின் கீழ், ஹரியானா மாநிலம் பானிபட்டில் 'அடல் துணி மறுசுழற்சி மற்றும் நிலைத்தன்மை மையம்' நிறுவப்பட்டுள்ளது. இது தேசியக் கொடி மறுசுழற்சி முயற்சி மற்றும் அராமிட் இழை மறுசுழற்சி திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
தேசியக் கொடி மறுசுழற்சி முயற்சியின் கீழ், பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட தேசியக் கொடிகளை அதன் கண்ணியம் குறையாமல் பாதுகாக்கவும் அல்லது பொறுப்புடன் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்தவும் ஒரு முறையான மற்றும் அறிவியல் ரீதியான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பாதுகாப்பு மற்றும் வான்வெளி போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் அராமிட் இழை கழிவுகளை கையாளுவதற்கும், மறுபயன்பாட்டிற்கும் புதிய தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்புகளை விளக்கும் நிகழ்ச்சி இன்று பானிபட்டில் நடைபெறுகிறது. பல நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சி முடிவுகளை ஏற்கத் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

