ADDED : டிச 05, 2024 07:32 AM

பெங்களூரு: ''காட்டு யானைகளின் தொந்தரவை கட்டுப்படுத்த, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்,'' என, பா.ஜ., - எம்.பி., மஞ்சுநாத் தெரிவித்தார்.
இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில், காட்டு யானைகளின் தொந்தரவு உள்ளது.
காட்டு யானைகள் மற்றும் வன விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது, விவசாயிகளுக்கும், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தினருக்கும் பெரும் சவாலாக உள்ளது. பெருமளவில் பயிர்களையும் வன விலங்குகள் சேதப்படுத்துகின்றன.
பெங்களூரு ரூரல், ஹாசன், ஷிவமொக்கா, சிக்கமகளூர் ஆகிய மாவட்டங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகம். விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். உயிரிழப்புகளும் நடந்துள்ளன. காட்டு யானைகளின் தொல்லையை தவிர்க்க, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, சமூக பொறுப்பு திட்டத்தின் நிதியை பயன்படுத்தி, 'டிரோன்' தொழில்நுட்பம் மூலமாக காட்டு யானைகள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். சோதனை முறையில் கோடிஹள்ளி அருகில், தொம்மசந்திரா பகுதியில், 25 யானைகள் கூட்டம் டிரோன் மூலம் கண்டுபிடித்து, காட்டுக்கு விரட்டப்பட்டன.
டிரோன் மூலம் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். யானைகள் ஊருக்குள் நுழைவது தெரிந்தால், உடனடியாக அவற்றை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பர். ஊருக்குள் வருவதை தடுக்க இந்த திட்டம் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.