ADDED : நவ 22, 2026 07:59 PM
ரூ.13 லட்சம் கார் தராததால்
திருமணத்தை நிறுத்திய போலீஸ்
சோனிபட்: ஹரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த ஹீனாவிற்கும், டில்லி போலீஸ்காரர் குல்தீப்புக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த, 20ல் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கு பெண் வீட்டார், 9.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, `ஹூண்டாய் ஆரா' காரை வரதட்சணையாக தர முன்வந்தனர். ஆனால் திருமணத்துக்கு ஒரு நாள் முன்னதாக குல்தீப், 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, `மாருதி பிரெஸ்ஸா' கார் தான் வேண்டும் என்று கூறியுள்ளார். குறுகிய காலத்தில் அவர்களால் அந்த காரை ஏற்பாடு செய்ய முடியவில்லை.
இந்நிலையில் திருமண நாளன்று சோனிபட் மண்டபத்துக்கு வந்த குல்தீப், பிரெஸ்ஸா கார் இல்லாததைக் கண்டு பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்து திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால் 1,200 பேருக்கு தயாரிக்கப்பட்டிருந்த உணவு வீணானது. இது குறித்து, மணமகளின் தந்தை சுபாஷ் குமார், மாப்பிள்ளை குல்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், திருமணத்துக்காக செலவு செய்த, 30 லட்சம் ரூபாயை திருப்பி தரக் கோரியுள்ளார்.
வெளிநாட்டு வேலைக்கு சென்ற
அசாம் நபர் மாயமானார்!
குவஹாத்தி: அசாம் மாநிலம், கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் முக்தாதிர் லஸ்கர், 35. இவருக்கு திருமணமாகி, மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேற்காசிய நாடான அஜைர்பைஜானில் வேலை கிடைத்ததை அடுத்து கடந்த ஜூலை 14ல் ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு லஸ்கர் சென்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் 26ல் மனைவியுடன் கடைசியாக தொலைபேசியில் பேசியபிறகு அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, ரஷ்ய ராணுவ சீருடையில் மற்ற வெளிநாட்டினருடன் லஸ்கர் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. இதனால், அவர் ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
லஸ்கரை கண்டுபிடித்து, பத்திரமாக நம் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடி, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதியவர் ஓட்டி வந்த பைக்கால்
தொடர் விபத்து: இருவர் பலி
காக்கிநாடா : ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதியவர் ஒருவர் நெடுஞ்சாலையை பைக்கில் கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க, அந்த வழியாக வந்த காரின் டிரைவர், காரை எதிர் திசைக்கு திருப்பியுள்ளார். அப்போது, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது. இதைத் தொடர்ந்து, அந்த வழியாக வந்த பைக், கார்கள் மீது மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்தவர் பல அடி துாரம் துாக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில், காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குக் காரணமான முதியவர், விபத்து நடந்த இடத்தில் நிற்காமல் தன் பைக்கில் தப்பிச் சென்றார். இந்த விபத்து காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
காதலை முறித்ததால் காதலி
வீட்டுக்கு தீ வைத்த வாலிபர்
மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த திபேஷ் ரஸ்தோகி என்பவரும், டோம்பிவிலியை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்துள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அந்தப் பெண், ரஸ்தோகியுடனான காதலை முறித்துள்ளார். பிரிவை ஏற்க முடியாத ரஸ்தோகி, கடந்த 19ல் டோம்பிவிலியில் உள்ள அந்தப் பெண்ணின் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று, வீட்டின் கதவில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். தீ பரவியதும், உள்ளே இருந்த அந்தப் பெண்ணும், அவரது பெற்றோரும் சுதாரித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து மன்படா போலீசார் வழக்குப் பதிவு செய்து ரஸ்தோகியை கைது செய்தனர்.
பெண் வேடமிட்டு டிரைவர்களிடம்
கொள்ளையடித்த இருவர் கைது
புதுடில்லி: டில்லி சிக்னேச்சர் பாலம் பகுதியில் இருந்து அசோக் விஹார் நோக்கி கடந்த 18ம் தேதி அதிகாலை சென்ற டெம்போ வேனை, பெண் வேடமணிந்த நபர் மறித்துள்ளார். டிரைவர் வேனை நிறுத்தி இறங்கியதும், மறைந்திருந்த அவரது கூட்டாளிகள் டிரைவரை தாக்கி, மொபைல்போன், 2,500 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். தப்பிச் சென்ற டிரைவர் நியூ உஸ்மான்பூர் போலீசில் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மோனு, 28, சாகர் சர்மா, 26, ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்த கும்பல், அதிகாலை நேரங்களில் யமுனா கதர் பகுதி போன்ற ஆள்நடமாட்டம் இல்லாத சாலைகளில் நுாதன கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவிழாவில் நுாடுல்ஸ் சாப்பிட்ட
118 குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு
பாலாகாட் : மத்திய பிரதேச மாநிலம், பாலாகாட் மாவட்டத்தில் உள்ள ஹிரி கிராமத்தில் நேற்று முன்தினம் திருவிழா நடைபெற்றது. அங்கு 'சவுமின்' எனப்படும் நுாடுல்ஸ் சாப்பிட்ட பலருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 118 குழந்தைகள் உடனடியாக கிர்னாபூர் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 73 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர். மீதமுள்ள 45 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக பாலாகாட் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். குழந்தைகளைத் தவிர, 12 பெரியவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அனைவரும் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
