அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் கடைசி: ஓய்வு குறித்து மனம் திறந்தார் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் கடைசி: ஓய்வு குறித்து மனம் திறந்தார் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
UPDATED : நவ 12, 2025 12:11 PM
ADDED : நவ 12, 2025 09:38 AM

புதுடில்லி: ''அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் கடைசி. அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன்'' என கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40). தன் வாழ்நாளில் 950க்கும் அதிகமான கோல்களை அடித்து சாதனை படைத்தவர். போர்ச்சுகல் அணிக்காக 223 போட்டிகளில் விளையாடி 141 கோல்களுடன் சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரராக ரொனால்டோ உள்ளார்.
தற்போது, சவுதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக, பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் ஆடி வருகிறார். ரொனால்டோ ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலராக ( சுமார் 11 ஆயிரம் கோடிக்கு மேல்) அதிகரித்துள்ளது. 40 வயதான இவர் ஓய்வு எப்போது என்று பரபரபாக பேசப்பட்டது.
இது குறித்து ரொனால்டோ கூறியதாவது: கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன். 2026ம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வு பெறுவேன், என்றார். வரும் 2026ல் ரொனால்டோ ஆடுவது, 6வது உலகக் கோப்பை போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

