10 மான்களை கடித்துக் கொன்ற தெருநாய்கள்; கேரளாவில் புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் சோகம்
10 மான்களை கடித்துக் கொன்ற தெருநாய்கள்; கேரளாவில் புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் சோகம்
ADDED : நவ 12, 2025 08:49 AM

திருச்சூர்: கேரளாவில் புதிதாக திறக்கப்பட்ட புத்தூர் விலங்கியல் பூங்காவில் 10 மான்களை தெருநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
336 ஏக்கர் பரப்பளவு கொண்ட புத்தூர் விலங்கியல் பூங்கா திருச்சூரில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவை கடந்த அக்.,28ம் தேதி முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார். ஆசியாவின் 2வது மிகப்பெரிய விலங்கியல் பூங்காவாகவும், இந்தியாவின் முதல் டிசைனர் பூங்காவாகவும் இது திகழ்ந்து வருகிறது. இங்கு 80 இனங்களைச் சேர்ந்த 534 விலங்குகள் உள்ளன.
தற்போது இந்தப் பூங்காவில் முன்பதிவு மூலம் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் பார்வையிட இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், புத்தூர் விலங்கியல் பூங்காவில் 10 மான்களை தெருநாய்கள் கடித்துக் கொன்றுள்ளன. பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், பூங்காவில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே அரங்கேறியுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்தப் பூங்காவை திறந்து 15 நாட்கள் கூட ஆகாத நிலையில், அங்குள்ள விலங்குகளின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழச் செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பதிலளிக்க மறுத்த பூங்கா அதிகாரிகள், மரணத்திற்கான சரியான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

