அமெரிக்கர் உட்பட 7 வெளிநாட்டினர் கைது செய்தது என்ஐஏ: 11 நாள் நீதிமன்ற காவல்
அமெரிக்கர் உட்பட 7 வெளிநாட்டினர் கைது செய்தது என்ஐஏ: 11 நாள் நீதிமன்ற காவல்
ADDED : மார் 17, 2026 10:54 PM

புதுடில்லி: அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த 6 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களை 11 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதில் கடந்த 13 ம் தேதி கைது அமெரிக்காவை சேர்ந்த மேத்யூ ஆரோன் வாரன் டியூக் கோல்கட்டா விமான நிலையத்திலும், உக்ரைனை சேர்ந்த பெட்ரோ ஹூர்பா, டாரஸ் சில்வியாக், இவன், மரியான் ஸ்டீபன் கிவ், மக்சிம், விக்டர் கமின்ஸ்கை டில்லி மற்றும் லக்னோ விமான நிலையத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அமெரிக்கர், 2011 லிபியாவில் நடந்த உள்நாட்டு போர் மூலம் பிரபலம் அடைந்தவர். அவர் ஈராக்கில் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக போரிட்டதுடன், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இவர்கள் உரிய அனுமதியின்றி மிசோரம் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சட்டவிரோதமாக மியான்மருக்குள் ஊடுருவி உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில், பழங்குடியின குழுக்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்துள்ளனர்.
இந்த குழுக்கள் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்புடையவை. இந்த குழுக்கள் அவர்களுக்கு ஆயுதம் வழங்கியதுடன், பயங்கரவாத பயிற்சி அளித்தும், டிரோன் பயிற்சி அளித்துள்ளனர். மியான்மரில் நடக்கும் டிரோன் திட்டங்களை கவனத்தில் வைத்து டிரோன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்களை 11 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகளுக்கு பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

