பாகிஸ்தானியர் கைதான வழக்கில் தகவல்களை திரட்டும் என்.ஐ.ஏ.,
பாகிஸ்தானியர் கைதான வழக்கில் தகவல்களை திரட்டும் என்.ஐ.ஏ.,
ADDED : நவ 27, 2024 11:40 PM
பெங்களூரு: பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்த பாகிஸ்தானியர்களின் பின்னணி குறித்த தகவல்களை என்.ஐ.ஏ., தகவலை திரட்டி வருகிறது.
பெங்களூரு ரூரல் ஜிகனியில் சட்டவிரோதமாக வசித்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஒரே குடும்பத்தின் நான்கு பேர், செப்டம்பர் 29ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானியர்கள் மேலும் சிலர், பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்து வருவது தெரிந்தது.
கைதான நான்கு பேரும் கொடுத்த தகவலின் பெயரில் பீன்யா, ஹாசனில் சட்டவிரோதமாக வசித்த மேலும் 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரையும் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக அழைத்து வந்து, இந்தியர்கள் என்று போலியாக ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த உத்தர பிரதேச மாநிலத்தின் பர்வேஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர்கள், நேபாளத்தில் உள்ள மெஹ்தி அறக்கட்டளை கூறியதன் பெயரில், பெங்களூருக்கு சட்டவிரோதமாக வந்து, மதத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டது தெரிந்தது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு இவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்றும், போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
கைதான 18 பேர் மீதும் 1,200 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர்.
கைதானவர்கள் பற்றிய பின்னணி தகவல்களை சேகரிக்கும் பணியில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.