பயங்கரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை!: உயர் பாதுகாப்பு அறையில் வைத்து சரமாரி கேள்வி
பயங்கரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை!: உயர் பாதுகாப்பு அறையில் வைத்து சரமாரி கேள்வி
ADDED : ஏப் 12, 2025 01:05 AM

புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டு தந்த பிரதான குற்றவாளியான பயங்கரவாதி தஹாவூர் ஹுசைன் ராணா, 64, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டதை அடுத்து, அவரை, 18 நாட்கள் என்.ஐ.ஏ., காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. உயர் பாதுகாப்பு உள்ள அறையில் வைத்து, அவரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள், மஹாராஷ்டிராவின் மும்பைக்குள் கடந்த, 2008, நவ., 26ல் புகுந்தனர்.
அரபிக்கடல் வழியாக மும்பைக்குள் வந்த அவர்கள், ரயில் நிலையம், இரண்டு ஹோட்டல்கள், யூதர்கள் மையத்தில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், 166 பேர் உயிரிழந்தனர்; 238 பேர் காயம் அடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் போலீசிடம் சிக்கினான். அவனுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சட்ட போராட்டம்
இந்த நாசவேலைக்கு மூளையாக செயல்பட்ட, வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வந்த பாகிஸ்தானியரான தஹாவூர் ஹுசைன் ராணா பற்றிய தகவல், என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இவர், மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்டதில் முக்கிய பங்கு வகித்ததும், 2008ல் மும்பைக்கு நேரடியாக வந்து, மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களை தேர்ந்தெடுத்த விபரமும் தெரிந்தது.
இதைத் தொடர்ந்து, தஹாவூர் ராணா அமெரிக்காவில் வைத்து, 2011ல் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வர நம் வெளியுறவுத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டது.
நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின், கடந்த 9ம் தேதி, என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் ராணா ஒப்படைக்கப்பட்டார்.
அவரை தனி விமானத்தில் அதிகாரிகள் டில்லி அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு விமானம் டில்லியில் தரையிறங்கியது.
பலத்த பாதுகாப்புடன் டில்லியில் உள்ள என்.ஐ.ஏ., தலைமையகம் அழைத்துச் செல்லப்பட்ட ராணா, நேற்று முன்தினம் இரவு, பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தர் ஜித் சிங் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். நீதிமன்றத்தை, 'ஸ்வாட்' எனப்படும், சிறப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரப்படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
18 நாட்கள்
மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்தர் மான் ஆகியோர் என்.ஐ.ஏ., தரப்பில் ஆஜராகினர்.
''உங்கள் தரப்பில் ஆஜராகப் போவது யார்?'' என, ராணாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
''யாரும் இல்லை,'' என, ராணா பதில் அளித்தார். இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் பியுஷ் சச்தேவா ராணா தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்டவர் என்ற முறையில், சதி பின்னணி குறித்து ராணாவிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக என்.ஐ.ஏ., தரப்பு தெரிவித்தது. அவரை, 20 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.
அவரை, 18 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் டில்லி சி.ஜி.ஓ., வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ., தலைமையகத்துக்கு ராணா அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்குள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.