ADDED : மார் 24, 2025 05:03 AM
சம்பிகேஹள்ளி: கையெறி குண்டு வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, ஹோட்டல் ஊழியரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பெங்களூரு பெல்லஹள்ளியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். கடந்த 19ம் தேதி சம்பிகேஹள்ளியில் உள்ள ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார். இரண்டு நாட்கள் ஆகியும் ஆதார் அட்டையை கொடுக்க மறுத்ததால், அவரது பையில் கடந்த 21 ம் தேதி ஹோட்டல் ஊழியர்கள் சோதனை செய்த போது, கையெறி குண்டு சிக்கியது.
சம்பிகேஹள்ளி போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட, கையெறி குண்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மத்திய, மாநில உளவுதுறை அதிகாரிகள், வழக்கு தொடர்பாக, சம்பிகேஹள்ளி போலீசாரிடம் தகவல் பெற்று கொண்டனர். பெங்களூரு என்.ஐ.ஏ., அதிகாரிகள், அப்துல் ரகுமானிடம் நேற்று முன்தினம் விசாரித்தனர்.
'ஹோட்டலில் வேலைக்கு சேர்வதற்கு முன்பு, குப்பை பொறுக்கும் தொழில் செய்தேன். அப்போது கையெறி குண்டு சாலையோரம் கிடந்தது. அது குண்டு என்று எனக்கு தெரியாது. ஏதோ வித்தியாசமாக இருந்ததால் அதை எடுத்து வைத்து கொண்டேன்' என்று, அப்துல் ரகுமான் கூறி உள்ளார். ஆனாலும் அவரது பின்னணி குறித்து விசாரணை நடக்கிறது.