ADDED : பிப் 21, 2025 05:33 AM

பாகலுார்: பெங்களூரில் போதைப் பொருள் விற்ற நைஜீரிய நபரின் தலையில் மரக்கட்டையால் அடித்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்தவர், அடியாக்கோ முசாலியோ, 40. பெங்களூரு பாகலுாரில் தங்கி இருந்தார். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டார்.
நேற்று முன்தினம் இரவு பாகலுார் அருகே பெல்லாவி பகுதிக்கு அடியாக்கோ காரில் வந்தார். போதைப் பொருளை விற்பனை செய்ய காத்து நின்றார்.
அப்போது அந்த வழியாக வந்த வாலிபர், அடியாக்யோவின் மீது சந்தேகம் அடைந்தார். 'போதை பொருள் விற்பனை செய்ய காத்து நிற்கிறாயா' என்று கேட்டார். இதனால், இருவருக்கும் இடையில் திடீரென வாய் தகராறு ஏற்பட்டது.
அருகே இருந்த கோழி கடைக்குள் சென்று, கத்தியை எடுத்து வாலிபரை அடியாக்கோ குத்த முயன்றார். சுதாரித்து கொண்ட வாலிபர், அடியாக்யோ தலையில் மரக்கட்டையால் ஓங்கி அடித்து விட்டு அங்கிருந்து தப்பினார்.
பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அடியாக்யோ இறந்தார்.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில், கொலை செய்த யாசின் கான், 28 கைது செய்யப்பட்டார்.