ADDED : டிச 12, 2025 12:19 AM

புதுடில்லி: தீ விபத்தில், 25 உயிர்களை பலி வாங்கிய கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் இருவர், தாய்லாந்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள பாகா கடற்கரை பகுதியில், 'பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற இரவு விடுதி செயல்பட்டு வந்தது. கடந்த 7ம் தேதி நள்ளிரவு, 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் விடுதியின் முதல் தளத்தில் நடனமாடிக் கொண்டிருந்த போது, தீ விபத்து ஏற்பட்டது. இதில் உடல் கருகியும், மூச்சு திணறியும் 25 பேர் பலியாகினர்.
இரவு விடுதி உரிமையாளர்கள் சவுரப் லுாத்ரா மற்றும் கவுரவ் லுாத்ரா, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு தப்பி சென்றனர். 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் உதவியுடன் அவர்களை கைது செய்ய, 'புளூ கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக, இரவு விடுதி உரிமையாளர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, தாய்லாந்து போலீசை மத்திய அரசு உஷார்படுத்தியது. அந்நாட்டின் சொகுசு ஹோட்டல் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது, கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் சவுரப், கவுரவ் சிக்கினர். அறையில் தங்கியிருந்த அவர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்தும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது

