ADDED : பிப் 26, 2024 07:20 AM

மாண்டியா: மாண்டியாவில் நிகில் குமாரசாமியை முன்னிலைப்படுத்தி, மாவட்ட கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தலை ஒட்டி, புதுடில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, அவரது மகன் நிகில் ஆகியோர் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுநடத்தினர்.
இதில், மாண்டியா, ஹாசன், கோலார் ஆகிய மூன்று தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளையில், லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, மாண்டியாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகா, காங்கிரஸ் லோக்சபா வேட்பாளர் என தொழிலதிபர் 'ஸ்டார்' சந்துரு என்ற வெங்கடரமண கவுடா என கூறி, தொகுதி முழுதும் பிரசாரத்தை துவக்கி உள்ளார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், வேட்பாளர் இன்னும் முடிவாகவில்லை என்றாலும், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சியினர் தீவிரம் காட்டி உள்ளனர்.
நிகிலுக்கு கே.ஆர்.பேட்டை எம்.எல்.ஏ., மஞ்சு, முன்னாள் அமைச்சர் புட்டராஜு ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மீண்டும் அவரையே, கூட்டணி வேட்பாளராக நிறுத்த குமாரசாமி வியூகம் வகுத்துள்ளார். இதனால் ம.ஜ.த., தலைவர்கள், நிகிலை முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர்.
மாண்டியாவின் கே.ஆர்.பேட்டையில் நேற்று ஹரிஹர்பூர் கோவில் விழாவில் நிகில் பங்கேற்றார்.
அவரை வரவேற்று, தொகுதி முழுதும் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

