காப்பாற்ற அரசு அனைத்தையும் செய்கிறது; கேரள நர்ஸ் நிமிஷா பிரியா வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து!
காப்பாற்ற அரசு அனைத்தையும் செய்கிறது; கேரள நர்ஸ் நிமிஷா பிரியா வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து!
ADDED : ஜூலை 18, 2025 12:46 PM

புதுடில்லி: ''ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அரசு முடிந்த அனைத்தையும் செய்கிறது'' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா,36. ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கிளினிக்கில் பணியாற்றினார். அப்போது நிமிஷா பிரியாவுக்கு தலால் தொல்லை கொடுத்துள்ளார். 2017 ல் தலாலுக்கு மயக்க மருந்து கொடுத்து பாஸ்போர்ட்டை மீட்கும் முயற்சியில் நிமிஷா இறங்கினார்.
அதில், அதிகப்படியான மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் தலால் உயிரிழந்தார். இந்த வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியா சார்பில் முஸ்லிம் மத குரு ஒருவர் முன் நின்று பேச்சு நடத்திய நிலையில், ஜூலை 16ம் தேதி அவருக்கு நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜூலை 18) சுப்ரீம் கோர்ட்டில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்த கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடரமணி கூறியதாவது:
ஏமனில் சிக்கலான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ராஜதந்திர ரீதியாக இந்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்றார். இதையடுத்து, ''ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அரசு முடிந்த அனைத்தையும் செய்கிறது'' என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.