ADDED : ஜூலை 06, 2025 12:45 AM

புதுடில்லி: நம் நாட்டில் பல கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, அமெரிக்காவில் நேற்று கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி உள்ளிட்டோர், 13,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்தாமல், 2018ல் நாட்டை விட்டு தப்பியோடினர்.
இதில் நிரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்சி கரீபிய தீவு நாடான ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனர்.
இருவரும், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டனர். 2019 மார்ச்சில், லண்டனில் நிரவ் மோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில், நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ., - அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளன.
அமெரிக்காவில் வசித்து வரும் நேஹல் மோடி, அந்நாட்டின் மன்ஹாட்டனில் உள்ள உலகின் மிகப்பெரிய வைர நிறுவனமான எல்.டி.டைமண்ட்ஸ் யு.எஸ்.ஏ., நிறுவனத்திடம் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை மோசடி செய்து வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்தும் நம் விசாரணை அமைப்புகள் விசாரிக்கின்றன. இவருக்கு எதிராக, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, 'ரெட் கார்னர்' நோட்டீசும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், சி.பி.ஐ., - அமலாக்கத் துறை கோரிக்கையின்படி, அமெரிக்காவில் நேஹல் மோடியை அந்நாட்டு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளார்.

