இந்தியாவிற்கு எதிரான போரில் பாகிஸ்தானால் வெற்றி பெற முடியாது: அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி எச்சரிக்கை
இந்தியாவிற்கு எதிரான போரில் பாகிஸ்தானால் வெற்றி பெற முடியாது: அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி எச்சரிக்கை
ADDED : அக் 25, 2025 04:14 PM

புதுடில்லி: '' இந்தியாவுக்கு எதிரான வழக்கமான போரில் பாகிஸ்தானால் வெற்றி பெற முடியாது,'' என அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ கூறியுள்ளார்.
அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏவில் 15 ஆண்டு பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜான் கிரியாகோ இந்தியாவின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். இவருக்கு பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
அதில் கூறியதாவது: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு உண்மையான போர் நடந்தால் எந்த நன்மையும் ஏற்படாது. ஏனெனில் பாகிஸ்தான் அதில் தோற்கும். நான் அணு ஆயுதங்களைப் பற்றி பேசவில்லை. வழக்கமான போரைப் பற்றி பேசுகிறேன். இந்தியர்களை தொடர்ந்து ஆத்திரப்படுத்துவதால் பாகிஸ்தானுக்கு எந்த பலனும் இல்லை.
அமெரிக்கா கட்டுப்பாட்டில் முஷாரப்
பாகிஸ்தானின் அணு ஆயுதத்தை அமெரிக்காவின் பென்டகன் கட்டுப்படுத்தியது. பாகிஸ்தானுடனான எங்கள் உறவு சிறப்பானதாக இருந்தது. பாகிஸ்தானை ஆட்சி செய்த முஷாரப், அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் வந்தார். உண்மையை கூற வேண்டும் என்றால் சர்வாதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா எப்போதும் விரும்பும். ஏனென்றால் அப்போதுதான், பொது மக்கள் கருத்து மற்றும் மீடியா பற்றி எந்த கவலையும் இருக்காது. இதனால் முஷாரப்பை நாங்கள் வாங்கினோம். பாகிஸ்தானுக்கு ராணுவம் அல்லது பொருளாதார ரீதியில் கோடிக்கணக்கான அளவுக்கு கடன் கொடுத்தோம். முஷாரப்பை அடிக்கடி சந்தித்ததுடன், அவர் வேண்டியதை செய்தும் கொடுக்கப்பட்டது.
போர் சூழல்
அவர், தனது ராணுவத்தை மகிழ்ச்சியாக வைத்து கொண்டார். இதனால் அல்கொய்தா குறித்து பாகிஸ்தான் ராணுவம் கவலைப்படவில்லை. அவர்கள் இந்தியா பற்றி மட்டுமே கவலைப்பட்டனர். ராணுவத்தை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவும், பிரிவினைவாதிகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவை ஆதரித்த முஷாரப், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிட்டார். கடந்த 2001 ம் ஆண்டில் இந்திய பார்லிமென்ட் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, 2002ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் அல்கொய்தா மற்றும் ஆப்கன் விவகாரத்தில் சிஐஏ முழு கவனம் செலுத்தி வந்ததால், இந்தியாவின் பிரச்னை பற்றி கவலைப்படவில்லை.
இஸ்ரேல் பாணி
துபாயில் அடைக்கலம் புகுந்து இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை சந்தித்தேன். அப்போது அவர் நாடு திரும்பினால், தனது கணவரால் கொல்லப்படுவேன் என அச்சம் கொண்டிருந்தார்.
பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி அப்துல் கதீர்கானை , இஸ்ரேல் பாணியில் அமெரிக்கா கொன்றிருக்க முடியும். ஆனால் அவருக்கு சவுதி அரேபியாவின் அரசின் ஆதரவைப் பெற்றி ருந்தார். அந்நாடு எங்களிடம் அவரை விடும்படி கெஞ்சியது. இதனால், அவரை விட்டுவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

