பிரதமர் மோடி மீது 25 காசு அளவிற்கு கூட குற்றச்சாட்டு இல்லை: அமித்ஷா பேச்சு
பிரதமர் மோடி மீது 25 காசு அளவிற்கு கூட குற்றச்சாட்டு இல்லை: அமித்ஷா பேச்சு
UPDATED : மே 06, 2024 04:40 PM
ADDED : மே 06, 2024 04:27 PM

கோல்கட்டா: ''23 ஆண்டுகளாக மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார். அவர் மீது 25 காசு அளவிற்கு கூட ஒரு குற்றச்சாட்டும் இல்லை'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
துர்காபூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: ராமர் கோயில் பிரதிஸ்டை விழாவிற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆனாலும் ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என பயந்து அவர்கள் ராமர் கோயிலுக்கு செல்லவில்லை.
ஊடுருவல்காரர்களின் ஓட்டு வங்கிக்காக மம்தா பயப்படுகிறார். பா.ஜ.,வை வீழ்த்த துர்காபூரில் 15 நாட்களாக மம்தா பிரசாரம் செய்து வருகிறார். இங்கேயே 5 ஆண்டுகள் தங்கியிருந்தாலும், துர்காபூரில் மம்தா வெற்றிப்பெற முடியாது என சவால் விடுக்கிறேன்.
தொழில்துறை நகரமான துர்காபூரில் ஒரு புதிய குற்றத் தொழிலை துவங்கியுள்ளார் மம்தா. இண்டியா கூட்டணியினர் ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளனர். மம்தாவின் அமைச்சர்களின் வீடுகளில் இருந்து ரூ.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி ஒருவரின் வீட்டில் இருந்து ரூ.350 கோடி ரொக்கம் மீட்கப்பட்டது. நேற்றிரவு ஜார்கண்ட் மாநிலத்தில் அமைச்சரின் வீட்டில் ரூ.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளாக மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார். அவர் மீது 25 காசு அளவிற்கு கூட ஒரு குற்றச்சாட்டும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.