நீலகிரி யானை வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவில் மாற்றமில்லை
நீலகிரி யானை வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவில் மாற்றமில்லை
ADDED : டிச 22, 2024 01:09 AM

புதுடில்லி: 'நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற, முந்தைய உத்தரவில் எந்த மாற்றங்களும் செய்ய முடியாது' என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.
'நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, நீலகிரி ரிசார்ட் உரிமையாளர்கள் மற்றும் பலர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி அப்துல் நசீர் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
அனுமதி பெற்றுள்ளோம்
அப்போது, மனுதாரர்கள் தரப்பில், 'ரிசார்ட்டுகள், கட்டடங்களை உரிய அனுமதியுடன் தான் கட்டி உள்ளோம். யானைகள் வழித்தடம் என வகைப்படுத்தப்பட்ட வனப்பகுதி என்று உருவாக்கப்படுவதற்கு முன்னரே, அங்கு அனுமதி பெற்று கட்டடம் கட்டி உள்ளோம்' என்றும் தெரிவிக்கப் பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'நீலகிரியில் யானைகள் வழித்தடம் என தமிழக அரசு வரையறுத்தது உறுதி செய்யப்படுகிறது.
'அந்த வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்டுகள் உள்ளிட்ட கட்டுமானங்களை ஆய்வு செய்து சட்டப்பூர்வமான தீர்வை வழங்குவதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு, தன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், 2020 அக்டோபர் 14ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், நீலகிரி யானைகள் வழித்தடத்தில் உள்ள, 14 ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்படுவோர் முறையிடவும், விளக்கங்களை கொடுக்கவும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்படுவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, கூடுதலாக ஏதேனும் விளக்கம் பெற வேண்டுமெனில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இறுதியானது
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் சில மாற்றங்களை கேட்டு மனுதாரர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு, '2020ல் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் இறுதியானது.
'இதில் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் அல்லது எதிர் மனுதாரர்களுக்கு ஏதேனும் நிவாரணம் தேவைப்படுகிறது என்றால், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம்' என விளக்கம் அளித்து, வழக்கு விசாரணையை முடித்து வைத்தது.