வேடிக்கை மட்டுமே பார்க்கிறாங்க.... வெள்ள பாதிப்பால் நொந்து போன மம்தா
வேடிக்கை மட்டுமே பார்க்கிறாங்க.... வெள்ள பாதிப்பால் நொந்து போன மம்தா
UPDATED : செப் 29, 2024 10:10 PM
ADDED : செப் 29, 2024 09:24 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகளில் மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கனமழை காரணமாக பரக்கா அணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பகுதி மாவட்டங்களான கூச், பெஹார், ஜல்பாய்குரி, அலிபுர்துர் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் மம்தா பானர்ஜி, அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது: மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
பராக்கா அணையை மத்திய அரசு முறையாக பராமரிக்காததால், நீர்பிடிப்பு பகுதிகளின் அளவு குறைந்துள்ளது. இதனை விரிவுபடுத்த பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
தேர்தல் பிரசாரத்திற்காக மட்டுமே பா.ஜ., தலைவர்கள் இங்கு வருகின்றனர். வெள்ள பாதிப்பு நிவாரண நிதி மேற்கு வங்கத்திற்கு மட்டும் தான் மறுக்கப்படுகிறது. இயற்கை பேரிடருக்கு எதிராக போராடி வரும் மாநில அரசுக்கு உதவாமல் மத்திய அரசு இருந்து வருகிறது.
டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள பெரிய நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் ராணுவ வீரர்களுடன் மாநில அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது, எனக் கூறினார்.