இனி தேர்தலில் போட்டியில்லை: சித்தராமையா அறிவிப்பு
இனி தேர்தலில் போட்டியில்லை: சித்தராமையா அறிவிப்பு
ADDED : ஏப் 03, 2024 07:32 AM

மைசூரு : ''இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்,'' என்று, முதல்வர் சித்தராமையா திடீரென அறிவித்து உள்ளார்.
மைசூரு, வருணாவில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி: எனக்கு இப்போது 77 வயது ஆகிறது. எனது எம்.எல்.ஏ., பதவிக்காலம் முடிய, இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளது. 2028 சட்டசபை தேர்தல் நடக்கும் போது, 81 வயது ஆகிவிடும். அந்த வயதில் தேர்தல் அரசியலில் ஈடுபட, எனது உடல்நிலை ஒத்துழைக்காது.
என்னால் மகிழ்ச்சியாக, வேலை செய்ய முடியாது. இதனால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஆனால் அரசியலில் நீடிப்பேன். வரும் 2028ம் ஆண்டுடன், நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது.
மாநிலத்திற்கு வறட்சி நிவாரணத்தை, மத்திய அரசு தரவில்லை. ஆனால் ஓட்டு கேட்க, மத்திய அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். குமாரசாமி பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டார்.
மாண்டியாவில் கடவுளின் விருப்பத்தால் போட்டியிடுகிறேன் என்று, குமாரசாமி கூறி உள்ளார். கடந்த தேர்தலில் அவரது மகன் நிகில், மாண்டியாவில் போட்டியிட்டது யார் விருப்பத்திற்காக. ம.ஜ.த., போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் தோல்வி அடையும். பிரஜ்வல் ரேவண்ணாவை தோற்கடிக்க, ஹாசனுக்கு சென்று பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலின் போது, 'இதுவே எனது கடைசி தேர்தல்' என்று, சித்தராமையா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

