UPDATED : பிப் 23, 2026 06:10 AM
ADDED : பிப் 23, 2026 04:14 AM

சென்னை: ''வெளிநாடுகளில் உள்ள தமிழகத்தின் கலை பொக்கிஷங்களை மீட்க வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் வலியுறுத்தினார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதனின் நுாற்றாண்டு விழா, 'திராவிடன் வி.வி.எஸ்., 100' என்ற பெயரில், நேற்று சென்னையில் நடந்தது.
ஒன்று கூட வேண்டும்:
இதில், அவரின் நுாற்றாண்டு சிறப்பு மலரை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன் வெளியிட, திராவிடர் கழக தலைவர் வீரமணி பெற்றுக் கொண்டார். சிறப்பு புகைப்பட கண்காட்சியை, உலகத் தமிழர் பேரவை் நிறுவன தலைவர் பழ.நெடுமாறன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் கோ.விஸ்வநாதன் பேசியதாவது:
தி.க., - தி.மு.க., - அ.தி.மு.க., என்ற திராவிட இயக்க வரலாற்றில், மூன்றிலும் துவக்க காலங்களில் இடம் பெற்றவர் வி.வி.எஸ்., என்பதால், கட்சி பாகுபாடுகளை கடந்து, அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்த வந்துள்ளனர். இதுபோல, தமிழக உரிமைகளுக்கும் அனைவரும் ஒன்று கூட வேண்டும். தமிழகத்தில் உள்ள, 61 பல்கலைகளில், 22 அரசு பல்கலைகளாக இருந்தும், 16ல் துணை வேந்தர்கள் இல்லை.
இது, மாநிலத்திற்கும், உயர் கல்விக்கும், மாணவர்களுக்கும் பெரும் ஆபத்தானது. அதை தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கடந்த, 1967 லோக்சபா தேர்தலில், நான் போட்டியிட்டபோது, அண்ணாதுரை 6,000 ரூபாய் கொடுத்தார். அதனுடன் என் பணத்தையும் சேர்த்து, 50,000 ரூபாய் செலவு செய்து, எம்.பி., ஆனேன்.
தற்போது, தேர்தல் கமிஷன் சொல்லும் கணக்குப்படி செலவு செய்தால் யாராலும் எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக முடியாது. இது, நல்ல மக்களாட்சிக்கு உதாரணம் அல்ல. அது மாற வேண்டும். அதற்கு நல்ல அரசியல்வாதிகளும் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
போராடுவேன்:
முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே பேசுகையில், ''எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில், 13 துறைகளை நிர்வகித்தாலும், 'ஹால்மார்க்' முத்திரை பெற்ற எளியவராக இருந்தவர் வி.வி.எஸ்., அவர் நீடுழி வாழ வேண்டும்,'' என்றார்.
தமிழக காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம், தி.மு.க., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பாராட்டி பேசினர்.
வி.வி.சுவாமிநாதன் தன் ஏற்புரையில், ''சேர, சோழ, பாண்டிய நாடுகளாக இருந்த தமிழகத்தை ஒருங்கிணைத்து ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் சிலையை மீட்க, சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது பெரிதல்ல. அந்த சிலையை திருடியவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டியதுதான் பெரிது.
அதேபோல், திருடப்பட்டு தனியார் அருங்காட்சியகத்தில் உள்ள கண்ணகி சிலையையும், பிரிட்டன், அமெரிக்காவில் உள்ள தமிழக கலை பொக்கிஷங்களையும் மீட்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் வாழ்வின் இறுதி வரை அதற்காக போராடுவேன்,'' என்றார்.

