எந்த பிராண்ட் என்றாலும் குவாட்டர் வெறும் ரூ.99 தான் இங்கல்ல... ஆந்திராவில்!
எந்த பிராண்ட் என்றாலும் குவாட்டர் வெறும் ரூ.99 தான் இங்கல்ல... ஆந்திராவில்!
ADDED : செப் 20, 2024 01:06 AM

அமராவதி: ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. புதிய மதுபான கொள்கையை அரசு அறிவித்துள்ளது. அது பற்றி அமைச்சர் கே.பார்த்தசாரதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு வழங்கிய தரம் குறைந்த மதுபானங்களால் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மலிவான விலையில் தரமான மதுவை குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
எனவே, அக்டோபர் 1 முதல், எந்த பிராண்டாக இருந்தாலும், குவாட்டர் எனப்படும் 180 மில்லி லிட்டர் மது புட்டியின் விலை 99 ரூபாயை தாண்டக் கூடாது.
குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். மது கடைகள் காலை 10:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை இயங்கும்.
உரிம கட்டணம், 50 முதல் 85 லட்சம் ரூபாய் வரை நான்கு அடுக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளருக்கு விற்பனையில், 20 சதவீதம் லாபம் கிடைக்கும்.
இது தவிர, 12 பிரீமியம் கடைகளுக்கு ஐந்தாண்டு உரிமம் வழங்கப்படும். அதற்கான விண்ணப்ப கட்டணம், 15 லட்சம் ரூபாய். உரிம கட்டணம், 1 கோடி ரூபாய்.
திருப்பதியில் பிரீமியம் கடைக்கு அனுமதி இல்லை. மதுபான கடைகளுக்கான உரிமத்தில், கள் இறக்கும் சமூகத்தினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும்.